கவலைதான்.. ஆனால்.. போரை நிறுத்த புதினுக்கு உத்தரவிடவா முடியும்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
டெல்லி: போர் நடக்கும் உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்பது தொடர்பான வழக்கில், ‛‛போரை நிறுத்த விலாடிமிர் புதினுக்கு கோர்ட்டு உத்தரவு போட முடியுமா?'' என கேள்வி எழுப்பினார்.
உக்ரைனில் 8 வது நாளாக இன்று போர் நடந்து வருகிறது. தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டு முன்னேறி வருகிறது.
இதனால் உயிர் பாதுகாப்பு கருதி உக்ரைன் மக்கள் வெளியேறி வருகிறார்கள். உக்ரைனில் படித்து வரும் இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்கள் மூலம் மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு பணியை 4 மத்திய அமைச்சர்கள் ஒருங்கிணைக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் மாணவி பாத்திமா அகானா உள்பட சில மாணவிகள் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், ‛‛உக்ரைனில் இருந்து ருமேனியா செல்லும் வழியில் மால்டோவாவில் எல்லையை தாண்ட முடியவில்லை. எங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''என கூறப்பட்டு இருந்தது.

வழக்கு விசாரணை
இந்த மனு இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா, ஏஎஸ் போபண்ணா, ஹிமா கோலி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வாதாடிய வக்கீல், ‛‛மத்திய அரசு கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள மாணவர்களை மீட்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதுதவிர பிற பகுதிகளிலும் அதிகளவில் மாணவர்கள் உள்ளனர். அவர்களையும் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்ரைனில் இருந்து இந்திய மாணவ-மாணவிகள் ருமேனியா வர முடியாமல் குளிரில் தவிக்கின்றனர். மீட்பு விமானங்கள் போலந்து, ஹங்கேரியில் இருந்து இயக்கப்படுகிறது. ருமேனியாவில் இருந்து இயக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் உள்பட பலர் அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனர்'' என வாதாடினார்.

எதிர்ப்பு
மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‛‛உக்ரைனில் போர் நடந்து வருகிறது. மத்திய அமைச்சர் ருமேனியாவில் உள்ளார். உக்ரைனில் இருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை'' எனக் கூறுவது விசித்திரமாக உள்ளது என்றார்.

உத்தரவிட முடியுமா
இதை கேட்ட தலைமை நீதிபதி என்வி ரமணா ‛‛ தலைமை நீதிபதி என்ன செய்கிறார் என சமூக வலைதளங்களில் சில வீடியோக்களை பார்த்தேன். மாணவர்களின் விஷயத்தில் இரக்கமும், கவலையும் கொள்கிறேன். ஆனால் இதில் கோர்ட் என்ன செய்ய முடியும். போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா?. மத்திய அரசு சார்பில் மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது'' என்றார்.

நடவடிக்கை எடுங்க
மேலும் இந்த விஷயத்தில் ருமேனியாவில் தவிக்கும் மாணவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபாலுக்கு தலைமை நீதிபதி என்வி ரமணா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications