அடுத்த சர்ச்சை.. குடியரசு தின விழாவில் மகாத்மா காந்தியின் விருப்ப பாடல் நீக்கம்.. என்ன நடந்தது?
டெல்லி: குடியரசு தின நிறைவு விழாவில் இசைக்கப்படும் தேசப்பிதா மகாத்மா காந்தியின் விருப்ப பாடலை மத்திய அரசு நீக்கி உள்ளது. இந்திய திருநாட்டின் குடியரசு தினம் வருகிற 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
ஆனால் குடியரசு தினம் முன்பாகவே பல சர்ச்சைகள் எழுந்தன. ஏனெனில் தலைநகர் டெல்லி குடியரசு தின விழாவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தெலுங்கானா புதுச்சேரியில் இரு மாநிலங்களுலும் குடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்றும் ஆளுநர் தமிழிசை

முப்படை பாசறை திரும்பும் நிகழ்வு
இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது குடியரசு தின விழா இசை பட்டியலில் இருந்து தேசப்பிதா மகாத்மா காந்தியின் விருப்ப பாடல் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா முடிந்து ஜனவரி 29-ம் தேதி முப்படைகள் திரும்ப பெறும் 'பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதாவது குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பும் முன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29-ம் தேதி நடத்தப்படும் அணிவகுப்பே 'பாசறை திரும்புதல் நிகழ்வு' ஆகும்.

தேசபக்தியை வளர்க்கும் இசை
தலைநகரில் டெல்லியில் இந்த நிகழ்வு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. வண்ணமயமான சீருடைகளுடன் இசைக்கருவிகளை வாசித்தபடி முப்படைகள் மிடுக்குடன் அணிவகுத்து செல்லும் காட்சிகள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிக அழகாக இருக்கும். இந்த அணிவகுப்பின்போது தேசபக்தியை வளர்க்கும் இசை வாசிக்கப்படுவது வழக்கம்.

மகாத்மா காந்தியின் விருப்ப பாடல் நீக்கம்
அதன்படி பாசறை திரும்பும் நிகழ்வு அணிவகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசப்பிதா மகாத்மா காந்தியின் விருப்ப பாடலான "அபெய்டு வித் மி" 'Abide with me' என்ற பாடல் இசைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இந்த வருடம் 'Abide with me' என்ற பாடல் நீக்கப்பட்டுள்ளது. வருகிற 29-ம் தேதி நடைபெறும் பாசறை திரும்பும் நிகழ்வு மகாத்மா காந்தியின் விருப்ப பாடல் இடம் பெறாது.

Abide with me
ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு பாசறை திரும்பும் நிகழ்வில் 'Abide with me' பாடல் நீக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு இந்த பாடல் மீண்டும் சேர்க்கப்பட்டது. தற்போது மீண்டும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தியின் விருப்ப பாடல் நீக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.