எல்லையில் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்.. நிலைமையை மோசமாக்கும் சீன ராணுவம்.. இந்தியாவின் பதிலடி என்ன
டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்தியா தனது பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ள போதிலும், அங்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வீரர்களைக் குவிப்பது போன்ற நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்துவதாக இந்திய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் சுமுகமான உறவு இல்லை. அதிலும் கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பும் கடந்த ஆண்டு மோதிக் கொண்ட பிறகு நிலைமை மேலும் மோசமானது
இந்தச் சூழலில் தற்போது காஷ்மீர் மட்டுமின்றி அருணாச்சல பிரதேச எல்லையிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ரோந்து பணிகள்
அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா தனது ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக அசாபிலா பகுதியில், சீனா உள்கட்டமைப்பில் அதிக அளவு முதலீடு செய்துள்ளது. இத்தகவலை இரண்டு ராணுவ உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "சீனா ரோந்து பணிகளை மேற்கொண்டு இருக்கும் நிலைமையைக் குழப்புகிறார்கள். அவர்கள் தங்கள் பொருட்களை விட்டுச் செல்கிறார்கள். சில சமயங்களில் கூடாரங்களைக் கூட அப்படியே விட்டுச் சென்றுள்ளனர், ரோந்து பணிகளுக்காக அவர்கள் விரிவான சாலையையும் போட்டுள்ளனர்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

சீனா
RALP என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் லோஹித் மற்றும் சியாங் ஆகிய பகுதிகளில் இந்தியா இரண்டு சாலை கொண்டுள்ளது. இப்போது அங்கு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதா இந்தியாவும் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சீனா இப்போது RALPஇல் உள்ள LACக்கு நெருக்கமாகத் தனது படைகளைக் குவித்து வருகிறது. மேலும் எல்லைப் பகுதிகளில் சாலைகள் தவிர, சுரங்கப்பாதைகள், இருப்பிடங்கள் ஆகியவற்றை கட்டும் பணிகளிலும் சீனா ஈடுபட்டு வருவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராணுவ உயர் அதிகாரிகள்
எல்லையில் சீனாவின் நடமாட்டமும் அதன் கட்டுமானப் பணிகளும் கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல தவாங் பகுதியில் சீனா பெரிய அளவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது மேலும், எல்லைப் பகுதிகளில் இந்தியா அதிகளவில் ராணுவத்தைக் குவித்து வருகிறது. அதேபோல பல அதிநவீன ஆயுதங்களும் கூட அருணாச்சலப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராணுவ ஜெனரல்
முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தின் அசாபிலா பகுதியின் நிலைமை குறித்த செய்தியாளக்ளின் கேள்விக்குப் பதிலளித்த கிழக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, "எல்லை அருகே சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ள பகுதிகளில் சீனா தற்போது கட்டுமானத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சீனா இந்த பணிகளைச் செய்து வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா சீனா மோதல்
கடந்த ஆண்டு, கிழக்கு லடாக்கின் மீது கவனம் இருந்தது. அங்கு இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வந்தன. அதேநேரம் சீனாவின் திட்டத்தை முன்பே யூகித்த இந்தியா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட கிழக்குப் பகுதியிலும் வீரர்களைக் குவித்தது. சீனாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தில் இந்தியாவும் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. குறிப்பாகச் சீனா எல்லையில் கட்டப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளது. சீனா இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.