நிலக்கரி தட்டுப்பாடு: அதிகரிக்கும் மின்தடை.. பதற்றத்தில் மாநில அரசுகள்.. பிரதமர் மோடி இன்று ஆலோசனை?
டெல்லி: நிலக்கரி தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்தடை பிரச்சனை தொடர்பாக மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. 2020ல் உலகம் முழுக்க கொரோனா பரவல் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டது. இதனால் மின் தேவை மொத்தமாக பாதிக்கும் கீழாக குறைந்தது. அலுவலகங்கள் மூடப்பட்டன, மக்கள் வீட்டிற்குள் முடங்கினார்கள்.
'நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாது.. மின்வெட்டிற்கு எல்லாம் நோ சான்ஸ்..' அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
ஆனால் 2021ல் இரண்டாம் அலைக்கு இடையிலும் கூட உலகம் முழுக்க தொழிற்சாலைகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டு மக்கள் வெளியே வர தொடங்கினார்கள். இது திடீரென மின் தேவையை அதிகரித்தது.

உலகம் முழுக்க
உலகம் முழுக்க கடந்த 4 மாதங்களாக உற்பத்தி தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க தொடங்கி உள்ளன. 2020ல் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய உற்பத்தியை தொழிற்சாலைகள் இரட்டிப்பாக்கி உள்ளது. இதனால் அதிக மின்தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்தேவையை ஈடுகட்ட போதிய நிலக்கரி கையிருப்பில் இல்லை. நிலக்கரி சுரங்கங்கள் ஒரு வருடத்திற்கு மேல் மூடப்பட்டதால் திடீர் தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி இல்லை.

சீனா
சீனாவில் கடந்த சில மாதங்களாக மின் தடை பிரச்சனை ஏற்பட இதுவே காரணம். இந்தியாவிலும் இதே காரணத்தால் மின்தடை பிரச்சனை அதிகரித்தது. அதோடு பொதுவாக மழை காலத்தில் நிலக்கரியை கொண்டு செல்ல முடியாது. மின் உற்பத்தி மையங்களுக்கு நிலக்கரியை கொண்டு செல்ல முடியாது. இதுவே இப்போது நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு காரணம். இந்தியாவின் 70 சதவிகித மின் உற்பத்தி நிலக்கரியை நம்பித்தான் இருக்கிறது. இதனால்தான் இந்தியாவில் தற்போது மின்தடை பிரச்சனை ஏற்பட தொடங்கி உள்ளது.

மின்தடை
கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு மாநில முதல்வர்கள் புகார் வைத்து இருந்தனர். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கேரளா, பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மின்தடை பிரச்சனை ஏற்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு நிலக்கரி தட்டுப்பாட்டை மறுத்து வந்தது. நிலக்கரி தட்டுப்பாடு இல்லை, தேவையான கையிருப்பு உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்து வந்தது.

மாநில முதல்வர்
ஆனால் பல்வேறு மாநில முதல்வர்கள் போதுமான நிலக்கரி உற்பத்தி மையங்களுக்கு வரவில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். ஆனாலும் மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்கே சிங், நிலக்கரி தட்டுப்பாடு குறித்து தேவை இல்லாத அச்சம் எழுந்துள்ளது. நிலக்கரி தேவையை விட அதிகமான கையிருப்பில் உள்ளது, 7.2 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

நிலையங்கள்
ஆனால் அமைச்சரின் கருத்துக்கு எதிர்மாறாக நாடு முழுக்க பல நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டது. நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தால் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்துதான் சிக்கலை உணர்ந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தட்டுப்பாடு
இந்தியாவில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து இவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து நிலக்கரி தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்தடை பிரச்சனை தொடர்பாக மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியருடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.