பஞ்சாப்பில்தான் வட இந்தியாவிலேயே நிலக்கரி பற்றாக்குறையால் மிக மோசமான மின்சார விநியோகப் பாதிப்பு!
டெல்லி: வட இந்திய மாநிலங்களிலேயே நிலக்கரி பற்றாக்குறையால் மிக மோசமான மின்சார விநியோக பாதிப்பை எதிர்கொண்டு அதிக மணிநேரம் மின்வெட்டை அமல்படுத்தியது பஞ்சாப் மாநிலம்தான்.
Recommended Video - Watch Now
நாடு முழுவதும் கடும் நிலக்கரிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மின்வெட்டு அபாயம் உருவாகி உள்ளது. இடைவிடாத கனமழை, சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்வு ஆகியவை நிலக்கரி பற்றாக்குறைக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இதனால் நாடு முழுவதும் நிலக்கரி மூலம் மின்சாரத்தை உருவாக்கும் அனல்மின் நிலையங்களில் பெரும்பாலானாவை இயங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலை விரைவில் சரியாகிவிடும் என்கிறது மத்திய அரசு.
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட 3 காரணங்கள்! எப்போது சரியாகும்? சீனாவில் நடப்பது என்ன?

மாநிலங்களில் மின்வெட்டு
இதனிடையே பல மாநிலங்கள் அனல்மின் நிலையங்களை மூடியும் உள்ளன. இதனால் மின்வெட்டை மாநிலங்கள் அமல்படுத்தியும் வருகின்றன. வட இந்தியாவில் மிக மோசமான மின்சாரப் பற்றாக்குறை, மின்வெட்டை எதிர்கொண்டிருக்கிறது பஞ்சாப் மாநிலம்தான்.

வட இந்தியா நிலவரம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்த மின்சார தேவை 19,843 மெகாவாட். திங்கள்கிழமையன்று விநியோகிக்கப்பட்ட மின்சாரம் 18,973. சுமார் 870 மெகாவாட் மின்சார பற்றாக்குறையை உ.பி. எதிர்கொண்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் மொத்த மின்சார தேவை 12,534 மெகாவாட். ராஜஸ்தான் விநியோகித்த மின்சாரம் 12,262. ஆக 272 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பற்றாக்குறை என்பதால் ராஜஸ்தான் மாநிலம் சமாளித்தது.

சமாளிக்கும் வட இந்திய மாநிலங்கள்
ஹரியானாவை எடுத்துக் கொண்டால் அதன் மொத்த மின்தேவை 8,382 மெகாவாட். திங்கள்கிழமையன்று ஹரியானா மாநிலம் நுகர்வோர்களுக்கு சப்ளை செய்தது 8,319 மெகாவாட். ஹரியானாவின் மின்பற்றாக்குறை 83 மெகாவாட் என்பதால் அம்மாநிலமும் சமாளித்துக் கொண்டது. ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், டெல்லி மாநிலங்களும் கணிசமான மின்சாரத்தை வடக்கு மின் தொகுப்பின் மூலம் பெற்று விநியோகம் செய்ததால் மின்தேவையை ஒருவழியாக சமாளித்து மின்வெட்டு உள்ளிட்ட அபாயங்களில் இருந்து தப்பியது.

பஞ்சாப்பில் பாதிப்பு அதிகம்
ஆனால் பஞ்சாப் மாநில மின்சார பற்றாக்குறை 2,295 ஆக இருந்தது. பஞ்சாப்பில் நுகர்வோர்களுக்கான மின்சார தேவை 11,046 மெகாவாட். ஆனால் மின்சார விநியோகிக்கப்பட்டது என்னவோ 8,751 மெகாவாட் மட்டுமே. இதனால் கடுமையான மின்வெட்டை பஞ்சாப் மாநிலம் அம்மல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மின்சாரப் பற்றாக்குறையால் 4 மணி நேரம் முதல் சுமார் 7 மணிநேரம் வரை மின்வெட்டை பஞ்சாப் அரசு அமல்படுத்தியது. அதாவது வட இந்திய மாநிலங்களில் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருப்பது பஞ்சாப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.