டிஸ்சார்ஜ்...மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சோனியா காந்தி.. காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
டெல்லி: உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். கொரோனாவில் இருந்து அவர் மீண்டு வந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜூன் 12ல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஜூன் 17 ல் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், ‛‛கொரோனா பாதித்த் நிலையில் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததால் ஜூன் 12ம் தேதி மதியம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் சுவாசக்குழாயில் அவருக்கு பூஞ்சை தாக்குதல் இருப்பது தெரியவந்தது. கொரோனா பாதிப்புக்கு பிந்தைய மற்றும் பூஞ்சை தாக்குதலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது'' என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து தொடர்ந்து சோனியா காந்திக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் குணமடைந்து வருகிறார். இந்நிலையில் தான் சோனியா காந்தியை டிஸ்சார்ஜ் ஆகிறார். இதுபற்றி இன்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், ‛‛காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். மேலும் வீட்டில் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்'' என கூறியுள்ளார். இதையடுத்து சோனியா காந்தி வீடு திரும்பியுள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்க பிரிவினர் சம்மன் வழங்கி இருந்தனர். இந்நிலையில் தான் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு விசாரணையில் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் ராகுல்காந்தி மட்டும் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். கடந்த 13ம் தேதி முதல் இன்று வரை 4 நாள் ராகுல்காந்தி அமலாக்கப்பிரிவினர் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டி ராகுல்காந்திக்கு அமலாக்கப்பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அப்போது சோனியா காந்தியின் உடல்நலனை குறிப்பிட்டு விசாரணைக்கு 3 நாள் அனுமதி கோரினார். அமலாக்கப்பிரிவினர் வழங்கிய அனுமதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரானது குறிப்பிடத்தக்கது.