நாடாளுமன்ற வளாகத்தில் 6 பெண் எம்.பிக்களுடன் செல்பி- சர்ச்சையில் சிக்கி பல்டி அடித்த சசி தரூர்
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் 6 பெண் எம்.பிக்களுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் காங். எம்.பி. சசிதரூர். அவர் பயன்படுத்திய வரிகள் கடும் சர்ச்சையானதை தொடர்ந்து தமது கருத்துகளை மாற்றி மீண்டும் பதிவிட்டிருக்கிறார் சசிதரூர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 23-ந் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.
ஜூலியின் தில்.. அதிகாலையில் பிரசவ வலி.. சைக்கிளை ஓட்டிக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்று.. சபாஷ் எம்பி

நாடாளுமன்றத்தில் இன்று..
இன்றைய கூட்டத்தில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா கடும் அமளிகளுக்கு இடையே இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்ட 12 ராஜ்யசபா எம்.பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சசிதரூரின் செல்பி
இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில்தான் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் சமூக வலைதளப் பதிவு கடும் சர்ச்சையாகி உள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸின் நுஸ்ரத் ஜஹான், மிமி சக்ரவர்த்தி, அகாலி தளம் பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதிமணி மற்றும் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருடன் சசிதரூர் செல்பி எடுத்து பதிவிட்டார். அந்த பதிவில் நாடாளுமன்றமும் பணிசெய்வதற்கான கவர்ச்சிகரமான இடம் (attractive place) என்கிற தொனியில் அவர் பதிவிட்டிருந்தார்.

நெட்டிசன்கள் விமர்சனம்
இந்த ஒற்றைவார்த்தைதான் மிக கடுமையான விமர்சனத்தை கிளப்பிவிட்டது. நாடாளுமன்றத்தில் பெண்கள் எம்.பிக்கள் இருப்பதாலே கவர்ச்சிகரமான இடமாகிவிடுகிறதா? என நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் பாலின பாகுபாட்டுடன் சசிதரூர் நடந்து கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டையும் நெட்டிசன்கள் முன்வைத்தனர். இன்னும் சிலர் முன்னாள் பிரதமர் நேரு பாணியில் சசி தரூர், படம் எடுத்து வெளியிட்டுள்ளதாகவும் விமர்சித்தனர்.

சசிதரூர் விளக்கம்
இதனைத் தொடர்ந்து தமது சமூக வலைதளப் பதிவுக்கு விளக்கம் தந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சசிதரூர். அதில், இந்த செல்பி படம் ஒரு நகைச்சுவைக்காக அனைவரது ஒப்புதலுடனேயே வெளியிடப்பட்டது. என்னுடன் செல்பி எடுத்த பெண் எம்.பிக்கள் பதிவிடவும் சொன்னார்கள். வருந்துகிறேன்.. இது நாங்கள் பணிபுரியும் இடத்தில் காட்டுகிற தோழமையின் வெளிப்பாடு. அவ்வளவுதான் இதில் இருக்கிறது என கூறி பிரச்சனையை முடித்து வைத்தார் சசி தரூர்.