அக்னிபாத்.. களத்திற்கு வந்த காங்கிரஸ்.. திட்டத்தை வாபஸ் பெறகோரி 27ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
டெல்லி: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து வரும் ஜூன் 27ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 'அக்னிபாத்' என்ற திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 14ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க வாய்ப்பளிக்கப்படும். 4 ஆண்டு பணியை முடித்து வெளியில் செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது.

ஆனால் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் நீண்டநாள் ராணுவ சேவையாற்ற விரும்பும் இந்திய இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது. மேலும் ஒப்பந்த பணியாக ராணுவ சேவை மாற்றப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.
ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அக்னிவீரர்களுக்கும் வழங்கப்படும். ஒருபோதும் அக்னிபாத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது. இந்திய ராணுவத்தை இளமையாக்கும் நோக்கில் நீண்ட காலம் திட்டமிடப்பட்டு கொண்டு வரப்பட்டது அக்னிபாத் திட்டம் என்று தெரிவித்தார். தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியது.
இந்தநிலையில் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மூத்த காங்கிரஸ் கட்சியினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசை விமர்சித்தனர். தொடர்ந்து பேரணியாக சென்ற காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இந்தநிலையில் அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி தரப்பில் ஜூன் 27ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தை நடத்திய நிலையில், அதே போல் மீண்டும் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியினரை உற்சாகப்படுத்த மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.