காங்.-க்கு வந்த அடுத்த தலைவலி.. இந்த முறை உத்தரகண்ட்டில்.. பரபரப்பை கிளப்பிய முன்னாள் முதல்வர்
டெல்லி: உத்தரகண்ட் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரசுக்கு புதிய தலைவலியைக் கொடுக்கும் வகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹரீஷ் ராவத் தலைமை குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது. இதனால் மற்ற மாநிலங்களிலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் வேலைகளைத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ்.
இரு தவணை டோஸில் உ.பி. முதலிடம்.. ஒரு தவணை டோஸில் உத்தரகண்ட்.. இந்தியா சாதனை

உத்தரகண்ட்
தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. குறிப்பாக உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியாகப் போட்டி நிலவுகிறது. கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் வெறும் 11 இடங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், இந்த முறை காங்கிரஸ் அதிகப்படியான இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.

குழப்பம்
இந்தச் சூழலில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரசுக்கு புதிய தலைவலியைக் கொடுக்கும் வகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹரீஷ் ராவத் தலைமை குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். 73 வயதாகும் ஹரீஷ் ராவத் தான் கடந்த 2012 காங்கிரஸ் சார்பில் உத்தரகண்ட் முதல்வராக இருந்தார். காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான நபராக ஹரீஷ் ராவத் அறியப்பட்ட நிலையில், அவரது இந்த ட்வீட்கள் உத்தரகண்ட் காங்கிரஸில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிருப்தி
ஹரீஷ் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில், ""இது விசித்திரமாக இல்லையா? இந்த தேர்தலை நாம் சந்திக்க வேண்டும். ஆனால் கட்சி எனக்கு ஆதரவு தருவதற்குப் பதிலாக என்னைப் புறக்கணித்துள்ளது அல்லது எதிராக வேலை செய்கிறது. நாம் செல்ல வேண்டிய இந்த கடலில் பல முதலைகளை உள்ளன. ஆனால், நான் யாரைப் பின்தொடர வேண்டுமோ, அவர்களை என் கைகளைக் கட்டிவிட்டார்கள். நான் போதிய அளவு செய்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். இது ஓய்வெடுக்க வேண்டிய நேரம்

புத்தாண்டில் புதிய வழி
அதேநேரம் நான் பலவீனமாக இல்லை. நான் ஒருபோதும் சவால்களைக் கண்டு ஓடமாட்டேன். ஆனால் நான் பெரும் குழப்பத்தில் உள்ளேன். புத்தாண்டு எனக்கு புதிய வழியைக் காட்டும் என்று நம்புகிறேன். சிவ பெருமாள் எனக்கு நல்ல வழியைக் காட்டுவார் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இது உத்தரகண்ட் காங்கிரசில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரீஷ் ராவத்
காங்கிரஸ் தலைமையில் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஹரீஷ் ராவத். கடந்த சில மாதங்களுக்குப் பஞ்சாப் காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்ட போது, அதைத் தீர்க்க பல முயற்சிகளை எடுத்தவர் ஹரீஷ் ராவத். அப்போது பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு இடையே பாலமாகச் செயல்பட்டவர் ஹரீஷ் ராவத். அப்படியொரு முக்கிய தலைவரா இப்படி ட்வீட் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.