காங்கிரஸ் தலைவர் தேர்தல் இப்போதைக்கு இல்லை.. ராகுலை காப்பாற்ற சோனியா போடும் கணக்கு.. பரபர தகவல்கள்!
டெல்லி : காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என முன்னணி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போதைக்கு அவர் தலைவராக பொறுப்பேற்க மாட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தவும், தேர்தல்களை எதிர்கொள்ளவும் திட்டங்களை வகுப்பதற்காக சமீபத்தில் உதய்பூரில் சிந்தனை அமர்வு மாநாடு நடைபெற்றது.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இந்தக் கூட்டத்திலும் காங்கிரஸுக்கு தலைவராக ராகுல் மீண்டும் வர வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. ராகுலும் தலைவர் பதவியை ஏற்க முடிவெடுத்திருந்தாலும், குஜராத், ஹிமாச்சல பிரதே தேர்தல் காரணமாக ராகுல் பதவியேற்பது தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது.

காங்கிரஸில் குழப்பம்
2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி காங்கிரஸ் கட்சி கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலிலும் தோல்வியடைந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலிலும் நான்கில் தோல்வியைச் சந்தித்தது. ஆட்சிப் பொறுப்பில் இருந்த பஞ்சாப்பையும் ஆம் ஆத்மியிடம் இழந்தது. தற்போது 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது. இதனால், கட்சிக்குள்ளேயே அதிருப்தி குரல்கள் கடுமையாக ஒலிக்கத் தொடங்கின. பா.ஜ.கவை எதிர்க்க வலிமையான தலைமை வேண்டும் என நிர்வாகிகள் கூறி வந்தனர்.

பிரசாந்த் கிஷோர்
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம், தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை அளித்தார். அவரை முழுநேரமாக கட்சியில் சேர்க்கும் முடிவுக்கு மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிக்கல் எழுந்தது. அவருக்கு மொத்த அதிகாரத்தையும் வழங்கக்கூடாது என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, காங்கிரஸுக்கு நான் தேவையில்லை. வலிமையான தலைமைதான் தேவை எனக் கூறிய பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் சேரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்தார்.

சிந்தனை அமர்வு மாநாடு
இதையடுத்து, காங்கிரஸ் சிந்தனையாளர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாடு காங்கிரஸில் முக்கிய மாற்றங்களைச் செய்வதற்காக கூடியது. வரவிருக்கும் சட்டசபை தேர்தல்கள், 2024ல் நடைபெறும் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மூன்று குழுக்களையும் அமைத்து சோனியா காந்தி அண்மையில் உத்தரவிட்டார்.

மீண்டும் தலைவர்
மேலும், உதய்பூர் சிந்தனை அமர்வு மாநாட்டில் ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு முன்னணி தலைவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. கட்சியை பலப்படுத்த முழுநேர தலைவர் அவசியம் என்றும் பல தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராகுல் காந்தியும், மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலால் சிக்கல்
ஆனால், குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூட சமீபத்தில், குஜராத்திலும், ஹிமாச்சல பிரதேசத்திலும், பெரும் சரிவைக் காண காங்கிரஸ் காத்துக்கொண்டிருக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார்.

இப்போது வேண்டாம்
இந்தத் தகவலால் அதிருப்தி அடைந்துள்ள தலைமை, இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமித்தால் இந்த 2 மாநில தேர்தல் தோல்விகளுக்கும் ராகுல் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இதனால், அவரது செல்வாக்கும் அடிபட்டுப் போகும். எனவே, இந்தத் தேர்தல்கள் முடிந்தபிறகு புத்துயிர் ஊட்டும் முயற்சியாக காங்கிரஸை தலைவர் ஆக்கலாம் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு
சில மாதங்களுக்கு முன்னர், உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளர் மதுசுதன் மிஸ்ரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குள் புதிய தலைவர் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தனர். ஆனால், காங்கிரஸ் மேலிடத்தின் இந்த முடிவால் 2 மாநில தேர்தல் முடிந்தபிறகு 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு ராகுல் காந்தி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.