மகாராஷ்டிராவுக்கு குட்பை! ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த ப சிதம்பரம்! நெகிழ்ச்சி நன்றி!
டெல்லி: தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இந்நிலையில் அவர் தனது மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா எம்பி பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இந்தியாவில் 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் துவங்கி நடைபெற்றது. இறுதியில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் 16 இடங்களுக்கு மட்டும் ஜூன் 10ல் தேர்தல் நடந்தது. இந்த 4 மாநிலங்களில் மட்டும் தான் ராஜ்யசபா தேர்தல் நடந்து உறுப்பினர்கள் தேர்வாகினர்.

முன்னதாக தமிழகத்தில் இருந்து 6 பேர் ஒருமனதாக ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ் குமார் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப சிதம்பரம், அதிமுக சார்பில் சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் ஒருமனதாக ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் வெற்றி முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ப சிதம்பரம் உள்ளிட்ட 6 பேரும் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா செல்கின்றனர்.
இதற்கு முன்பு ப சிதம்பரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகி இருந்தார். தற்போது தமிழகத்தில் இருந்து அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா உறுப்பினர் பதவியை அவர் ராஜினமா செய்தார். இதற்கான கடிதத்தை ப சிதம்பரம், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இன்று வழங்கினார். அவர் அதனை ஏற்றுக்கொண்டார்.
இதுகுறித்து ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛நான் தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா் மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபாவின் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை நான் பிரதிநித்துவப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன். மகாராஷ்டிரா மக்கள் எதிர்காலத்தில் சிறப்பாகவும், அமைதியுடனும் வாழ வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.