அடக்குமுறை.. இரவோடு இரவாக இந்தியர்களின் உரிமைகளை பறித்த காங்கிரஸ்.. ஆவேசமாக சொல்கிறார் அமித்ஷா!
டெல்லி : எமர்ஜென்சி என்ற பெயரில் அரசியல் சாசன உரிமைகளை காங்கிரஸ் கட்சி பறித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 47வது நினைவு நாளான இன்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் அமித்ஷா.
ஒவ்வொரு இந்தியரின் உரிமைகளையும் பறித்து அடக்குமுறைகளில் அந்நிய ஆட்சியை மிஞ்சியது காங்கிரஸ் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார்.
மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்: டெல்லி விரைகிறார் பட்னாவிஸ்- அமித்ஷா, ஜேபி நட்டா பரபர ஆலோசனை!

எமர்ஜென்சி
இந்தியாவில் 1975 ஜூன் 25ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபரூக் அலி அகமது, அவசர நிலையை பிரகடனம் செய்தார். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேர்ந்துவிட்டதாகக் கூறி இந்த நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. 1977 மார்ச் மாதம் வரை சுமார் 21 மாதங்கள் இந்த அவசரநிலை நீடித்தது.

கைது
எமர்ஜென்சி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். செய்தித்தாள்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டன. நாட்டில் எமர்ஜென்சி காலத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அல்லது குரல் எழுப்பிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அமித்ஷா
இன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 47வது நினைவு நாள். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 1975 ஆம் ஆண்டு இதே நாளில், அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், ஒவ்வொரு இந்தியனின் அரசியலமைப்பு உரிமைகளையும் இரவோடு இரவாகப் பறித்து, எமர்ஜென்சியை விதித்தது.

அடக்குமுறை
ஒவ்வொரு இந்தியரின் உரிமைகளையும் பறித்து அடக்குமுறைகளில் அந்நிய ஆட்சியை மிஞ்சியது காங்கிரஸ். சர்வாதிகார மனநிலைக்கு எதிராகப் போராடி ஜனநாயகத்தை மீட்டெடுக்க தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அனைத்து தேசபக்தர்களுக்கும் சல்யூட்" எனப் பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங்
இதேபோல, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், 47 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டதை ஒருபோதும் மறக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் தங்களை அர்ப்பணித்து, அரசியலமைப்பு மற்றும் நிறுவனங்களின் கண்ணியத்தைப் பேண உறுதிமொழி எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.