Omicron Corona: டெஸ்டிங்கை அதிகப்படுத்துங்க.. கவனமாக இருங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
டெல்லி: ஓமிக்ரான் கொரோனா பரவலை முன்னிட்டு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும், வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகம் முழுக்க ஓமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரிட்டன், இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், போஸ்ட்வானா, இஸ்ரேல், தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தமாக உலகம் முழுக்க தற்போது 110 ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கேஸ்களும், 1200க்கும் அதிகமான ஓமிக்ரான் சந்தேக கேஸ்களும் கண்டறியப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் 300 பாம்புகளை பிடித்தவர் பலி.. 301வது பாம்பை அஜாக்கிரதையாக பிடித்தபோது பரிதாபம்

ஓமிக்ரான் கொரோனா
ஓமிக்ரான் கொரோனா பரவலை முன்னிட்டு இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் புதிய விமான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க வேண்டும்.

கட்டுப்பாடு
தீவிர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை உடனே அதிகரிக்க வேண்டும். ஓமிக்ரான் கொரோனா பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிர சோதனைக்கு உள்ளாக்க வேண்டும். உடனடியாக கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

கண்காணிப்பு
மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஓமிக்ரான் கொரோனா பரவிய நாடுகளில் இருந்து இதற்கு முன்பே இந்தியா வந்தவர்களையும் சோதிக்க. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை சோதிப்பதற்கான protocalஐ கடுமையாக பின்பற்ற வேண்டும். சில மாநிலங்களில் கொரோனா சோதனைகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது.

கவனமாக செயல்பட வேண்டும்
குறைவான சோதனைகள் பரவலை அதிகப்படுத்தும். மீண்டும் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும். திடீரென கேஸ்கள் அதிகரிக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். ஏற்கனவே கண்டறியப்பட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளையும், புதிய ஹாட்ஸ்பாட் பகுதிகளையும் முறையாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

சோதனைகள்
கொரோனா பாசிடிவ் டெஸ்ட் சதவிகிதம் 5க்கும் கீழ் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்; மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். யாருக்கும் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட கூடாது. மக்களிடம் வதந்திகள் பரவும் போது மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும், என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.