விரைவில் கொரோனா தடுப்பு மருந்து...நமது வீரர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்...பிரதமர் பேட்டி!!
டெல்லி: எல்லையில் நாட்டை பாதுகாத்துக் கொண்டு இருக்கும் நமது ராணுவ வீரர்களுடன் நாடு துணை நிற்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
கொரோனா பரவலுக்கும் இடையே இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. சபாநாயகர் ஓம் பிர்லா பேசி வருகிறார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இன்று நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, ''நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''குளிர்கால கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து விரைவில் கொண்டு வரப்படும். கூட்டம் சுமூகமாக நடப்பதற்கு அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
கொரோனா கால கட்டத்திலும் கூட்டம் நடப்பதற்கு அனைத்து எம்.பி.க்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் அவை நடப்பதற்கு எம்.பிக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது- இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் அமர்ந்த எம்.பிக்கள்
விரைவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும். அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்து கொண்டு வருவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றன. நம்முடைய விஞ்ஞானிகள் விரைவில் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பார்கள். ஒவ்வொருவரும் இந்தப் பிரச்சனையில் இருந்தும் வெளியே கொண்டு வரப்படுவார்கள்.

எல்லையில் நம்முடைய வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். நமது நாடு வீரர்களுடன் துணை நிற்கிறது. ஒவ்வொருவரும் எல்லையில் வீரர்களுடன் இருக்கிறோம் என்ற செய்தியை அனைத்து எம்.பி.க்கள் மூலம் அளிக்க வேண்டும்'' என்றார்.
ஜிடிபி சரிவு, இந்திய - சீன எல்லையில் பதற்றம், பொருளாதார சரிவு, வேலை இழப்பு, தொழில்கள் முடக்கம், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கல் தொடர்பான விவாதங்கள் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தை ஆக்கிரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக மனு கொடுத்துள்ளனர். கிழக்கு லடாக்கில் சீனாவுடன் பதற்றம் தொடர்பாக காங்கிரஸ் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்துள்ளது. டெல்லி வன்முறையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக ஐயுஎம்எல் மற்றும் சிபிஎம், நீட் தேர்வு அச்சம் காரணமாக 12 பேர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திமுக மற்றும் சிபிஎம், சில முக்கிய தலைவர்களின் பெயரை டெல்லி கலவர குற்றச்சாட்டில் சேர்த்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்எஸ்பியும், அதிகாரத்தில் இருக்கும் 10,000 இந்தியர்களை சீன நிறுவனம் வேவு பார்ப்பது தொடர்பாக காங்கிரஸ், ஏஐடிசி ஆகியவை ஒத்தி வைப்பு தீர்மானம் தொடர்பான கடிதம் கொடுத்துள்ளன.