பட்டாசாக வரும் நாசில் பூஸ்டர் டோஸ்! இறுதி சோதனை தொடங்கிய பாரத் பயோடெக்- மூக்கிலேயே வைரசை அழிக்குமாம்
டெல்லி: இந்தியாவில் தற்போது கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், நேரடியாக மூக்கில் செலுத்தக் கூடிய பூஸ்டர் டோஸ் வேக்சின் சோதனையை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை அலறவிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் உள்ளது. உலகெங்கும் பல லட்சம் பேரை நாம் கொரோனாவால் இழந்துள்ளோம்.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இருப்பினும், கொரோனாவை முழுவதுமாக ஒழிப்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

வேக்சின்
தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக பார்க்கப்படுகிறது. கொரோனா வேக்சின்கள் தீவிர கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பைத் தடுப்பது தெளிவாகத் தெரிவதால் வேக்சின் பணிகளையே தற்போது உலகின் பல்வேறு நாடுகளும் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும் இதுவரை 160 கோடிக்கும் அதிகமான வேக்சின்கள் இதுவரை மக்களுக்குப் போடப்பட்டுள்ளன.

பூஸ்டர் டோஸ்
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல கொரோனாவுக்கு எதிராக புதிய வேக்சின்களை கண்டுபிடிக்கும் ஆய்விலும் உலக ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் நேரடியாக மூக்கில் செலுத்தக் கூடிய பூஸ்டர் டோஸ் சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 2 டோஸ் கோவாக்சின் பெற்றவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸை அளிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாசில் ஸ்ப்ரே
இந்நிலையில், இந்த நாசில் ஸ்ப்ரே வேக்சினின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த தற்போது இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படும். ஊசி, சிரஞ்ச் உள்ளிட்டவை இல்லாமல் நேரடியாக மூக்கில் செலுத்தப்படுவதால், குறைந்த காலத்தில் அதிகப்படியான நபர்களுக்கு பூஸ்டர் டோஸை செலுத்த முடியும் என பாரத் பயோடெக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

என்ன செய்யும்
BBV154 என்ற இந்த மூக்கில் செலுத்தப்படும் வேக்சின், வைரஸ் நமது உடலில் பரவ தொடங்கும் மூக்கிலேயே கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதை மிக எளிதாகச் செலுத்திக் கொள்ளலாம் என்பதால் இதற்காகத் தனியாகப் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் யாரும் தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ளக் கடந்த மாதம் பாரத்பயோடெக் அனுமதி கோரி இருந்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

அனுமதி
முன்னதாக சமீபத்தில் தான் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் வேக்சின்களை நேரடியாகச் சந்தையில் கிடைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், எப்போது முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டுகளை நேரடியாகச் சந்தையில் கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இந்தச் சூழலில் தான் தற்போது பூஸ்டர் டோஸ் சோதனைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.