தூக்கு தண்டனை கோரிய என்ஐஏ - யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் - பரபரப்பு தீர்ப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதக் குழு தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதக் குழு தலைவரான யாசின் மாலிக் உள்ளிட்ட 4 பேர் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்தது.
அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு!
அவர்களுக்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதே ஆண்டு ஏப்ரல் மாதம் யுஏபிஏ உள்ளிட்ட வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

என்ன புகார்?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமைதியை சீரழித்தல், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவித்தது, பாகிஸ்தானிடம் இருந்து பயங்கரவாத செயல்களுக்காக நிதி வாங்கியது, காஷ்மீரில் ராணுவத்துக்கு எதிரான கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டது, 2010 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் கலவரங்களை தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளி என தீர்ப்பு
இந்த வழக்குகள் டெல்லியில் இருக்கும் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. 3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து கடந்த 19 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அதில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வசூலித்ததாக என்.ஐ.ஏ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பு வெளியானது.

தூக்கு தண்டனை வழங்க கோரிக்கை
யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரம் மே 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என என்.ஐ.ஏ. நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இதனிடையே யாசின் மாலிக்கிற்கு அதிபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என என்.ஐ.ஏ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தன்மீதான குற்றங்களை இந்திய உள்துறை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகி, தூக்கு தண்டனையை ஏற்கிறேன் என யாசின் மாலிக் தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

என்ன தண்டனை?
இந்த நிலையில் இன்று மாலை யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரத்தை டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல், யுஏபிஏ, பயங்கரவாதத்துக்காக நிதி திரட்டியது ஆகிய வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட யாசின் மாலிக்கிற்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதுடன் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.