அச்சுறுத்தும் R value.. 4ஆம் அலையின் தொடக்கமா? சென்னை ஐஐடி ஆய்வாளர்களின் புதிய வார்னிங்
டெல்லி: கொரோனா வைரஸ் குறைந்து மெல்ல இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில், R-value அதிகரிக்க தொடங்கி உள்ளது சற்றே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020இல் கொரோனா முதல் அலை ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் 2021 டெல்டா கொரோனா காரணமாக நாட்டில் 2ஆம் அலை ஏற்பட்டது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலை மிக மோசமாகவே இருந்தது.
இந்தச் சூழலில் தான் கடந்த ஜனவரி மாதம் நாட்டில் மீண்டும் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாம் அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக முதல் 2 அலைகளைப் போல இல்லாமல் 3ஆம் அலை லேசான பாதிப்பையே ஏற்படுத்தியது.
சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு - தினசரி உயரும் கொரோனாவால் மாணவர்களிடையே அச்சம்

கொரோனா வைரஸ்
கொரோனா குறைந்த பின்னர், நாட்டில் மெல்ல இயல்பு நிலை திரும்பியது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் மெல்ல நீக்கப்பட்டன. சில மாநிலங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் கூட நீக்கப்பட்டன. நாடு முழுக்க வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில், பொதுமக்கள் மெல்ல கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கித் திரும்பி வந்தனர். இந்தச் சூழலில் தான் நாட்டில் சில பகுதிகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

R value
குறிப்பாக, டெல்லியில் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு படுவேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் R value அச்சுறுத்தும் வகையில் 2.1ஆக உள்ளதாக ஐஐடி- மெட்ராஸ் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது தலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் இரண்டு பேருக்கு வைரஸ் பாதிப்பைப் பரப்புகின்றனர். வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஒருவர் மூலம், எத்தனை பேருக்கு வைரஸ் பரவுகிறது என்பதே R value என்று குறிக்கப்படும். டெல்லியில் இந்த R value தான் 2.1ஆக உள்ளது.

ஐஐடி சென்னை
இது நாட்டில் ஏற்படும் கொரோனா 4ஆம் அலையின் தொடக்கமாக இருக்கமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர், "தற்போதைய சூழலில் இது கொரோனா 4ஆம் அலையின் தொடக்கமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இப்போது நமக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்று தான். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர் மூலம் இருவருக்கு வைரஸ் பரவுகிறது. ஆனால், அடுத்த கொரோனா அலை தொடங்கிவிட்டதா என்பதைச் சொல்ல இன்னும் கொஞ்சம் காலம் வேண்டும்.

இப்போது சொல்ல முடியாது
பொதுமக்களுக்கு தடுப்பாற்றல் எப்படி உள்ளது, 3ஆம் அலையில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பன உள்ளிட்ட தகவல்கள் குறித்து எங்களுக்குத் தெரியாது. இதையெல்லாம் தெரிந்து கொள்ள நமக்குச் சிறிது காலம் தேவை" என்றார். அதேநேரம் நாட்டின் மற்ற மெட்ரோ நகரங்களான மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா நகரங்களில் வைரஸ் பாதிப்பு இதுவரை குறைவாகவே இருந்து வருகிறது.

ஓமிக்ரான்
டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. கடந்த வெள்ளிக்கிழமை 1042 பேருக்கு டெல்லியில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 4.64 சதவீதமாக இருந்தது. தலைநகர் டெல்லியில் BA.2.12, BA.2.12.1 வகை பரவி வருகிறது. டெல்லியில் வைரஸ் பாதிப்பு வேகமாகப் பரவ இந்த இரண்டு வகை ஓமிக்ரான் கொரோனா முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.