இது தான் சொகுசா? வந்தே பாரத் ரயிலுக்குள் மளமளவென ஒழுகிய தண்ணீர்.. திட்டி தீர்த்த பயணிகள்
டெல்லி: சொகுசு ரயிலான வந்தே பாரத் ரயிலுக்குள் தண்ணீர் ஒழுகிய காட்சிகள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. டெல்லி - வாரணாசி ரூட்டில் ஓடும் வந்தே பாரத் ரயிலில்தான் இப்படி தண்ணீர் ஒழுகியது, இதற்கு ரயில்வே தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதி நவீன சொகுசு ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முழுவதும் ஏசி வசதி, வைஃபை வசதி, பயோ டாய்லட், தானியங்கி கதவுகள் என வந்தே பாரத் ரயில்களில் பல்வேறு வசதிகள் உள்ளன.

வந்தே பாரத் ரயில்: அதிவேகத்துடனும் செல்லும் திறன் கொண்டவையாக இந்த பேருந்துகள் இருப்பதால் செல்ல வேண்டிய நகரங்களுக்கு விரைவாக சென்று விட முடியும் என்பதால் பயணிகள் இந்த ரயிலில் செல்ல அதிகம் விரும்புகிறார்கள். கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் கூட சொகுசு வசதி காரணமாக வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் தனி மவுசு உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக வந்தே பாரத் ரயில் டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் இயக்கப்பட்டது. படிப்படியாக பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை - கோவை, கோவை - பெங்களூர், சென்னை - நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன.
பராமரிப்பு முறையாக இல்லை: நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் இயக்கப்பட உள்ளன. ஆனால், வந்தே பாரத் ரயில்களில் தற்போது பரமாரிப்பு முறையாக இல்லை என அவ்வப்போது பயணிகள் முன்வைக்கும் விமர்சனமாக உள்ளது.
மழை நீர் ஒழுகியது: ரயிலில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என பயணிகள் அடிக்கடி புகார் கூறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், கோடை விடுமுறையில் வந்தே பாரத் ரயிலுக்குள் டிக்கெட் எடுக்காத பயணிகள் ஏறி நகர கூட வழி இல்லாமல் பயணித்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலுக்குள் மழை நீர் ஒழுகிய காட்சிகள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி - வாரணாசி ரூட்டில் ஓடும் வந்தே பாரத் ரயிலில்தான் இப்படி மழை நீர் அருவி போல கொட்டியதாகவும், பயணிகள் பலரும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தனர்.
ரயில்வே விளக்கம்: இருக்கைகளும் நனைந்ததால் கடும் சிரமம் அடைந்ததாகவும், வந்தே பாரத் ரயில்கள் மோசமாக பராமரிக்கப்படுவதாகவும் பயணிகள், ரயில்வே நிர்வாகத்தை விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், "ரயில் பெட்டியில் உள்ள குழாயில் லேசான அடைப்பு இருந்ததால் தண்ணீர் கசிந்தது. உடனடியாக ரயில்வே ஊழியரால் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications