பாலியல் வன்புணர்வு வழக்கில்.. நான் கூறியது.. தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.. தலைமை நீதிபதி விளக்கம்
டெல்லி: கடந்த வாரம் பாலியல் வன்புணர்வு வழக்கில் தான் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அந்த நபர் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் கோரிக்கையைப் பரிசீலனை செய்வதாக நீதிபதி எஸ்.ஏ பாப்டே தெரிவித்தார். தலைமை நீதிபதியின் இந்தக் கருத்து நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்தக் கருத்திற்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், நீதிபதி பாப்டே உடனடியாக தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பான 5,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனுவும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விளக்கம் அளித்துள்ளார். இந்த விமர்சனங்களை நியமற்றது என தெரிவித்த அவர், தான் கூறிய கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யப் போகிறீர்களா என்று கேள்வியையே எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் மீது மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.