மருத்துவ படிப்பில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு.. உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய இடையீட்டு மனு
டெல்லி: மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 27% இட ஒதுக்கீடு முறையை இந்தாண்டே அமல்படுத்த எவ்வித தடையும் விதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை இந்தாண்டு அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த அரசாணை மூலம் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பயன் பெறுவார்கள். இந்தச் சூழலில் அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏகப்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக, இது தொடர்பாகக் கோவாவைச் சேர்ந்த 17 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த ஆண்டில் பழைய இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் திமுக சார்பில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் புதிய இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் பல ஆண்டுகளாக தங்கள் இயக்கம் சட்டப் போராட்டம் நடத்தி வருவதால் இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்த இடையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்கள் தரப்பு கருத்துகளை முழுமையாகக் கேட்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் அரசாணையை அப்படியே ஏற்றுக் கொண்டு இந்தாண்டே அமல்படுத்த வேண்டும் என்றும் 27% இட ஒதுக்கீடு முறையை இந்தாண்டு அமல்படுத்துவதில் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வு.. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு