அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் திமுக மனு.. பரபரப்பு புகார்
டெல்லி: அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக எம்எல்ஏ சரவணன் மற்றும் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
2016ம் ஆண்டு நடந்த திருப்பங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏகே போஸ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் ஜெயலலிதா மருத்துவமனையில் சுயநினைவு இல்லாத போது அவரிடம் கைரேகை பெற்றதாக கூறுவது மோசடி என்றும் எனவே அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றிபெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதிரடியான தீர்ப்பு வழங்கியது.

திமுக எம்எல்ஏ மனு
இந்நிலையில் திமுக எம்எல்ஏ சரவணன் மற்றும் வழக்கறிஞர்கள் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என இன்று மனு அளித்தனர்.

ரத்து செய்ய முடியும்
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வழக்கறிஞர்கள், "அங்கீகரிக்கப்பட் கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளையோ, தேர்தல் ஆணையத்தின் சட்டங்களையோ தேர்தலில் நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றும் வகையில் செயல்பட்டு இருந்தால், அந்த கட்சிகளின் அங்கீகாரத்தையும், சின்னத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்றார்கள்.

முறைகேடு உறுதி
திமுக எம்எல்ஏ சரவணன் அளித்த பேட்டியில், அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் மனு அளித்துள்ளோம். 2016ல் நடந்த இடைத்தேர்தல் சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோமா நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். அப்போது தேர்தலில் முறையாக கையெழுத்து வாங்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்கள் தேர்தல் அதிகாரியுடன் இணைந்து முறைகேடு செய்திருப்பதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அப்பீல் செய்யும் நேரமும் தாண்டிவிட்டது. நாங்கள் அளித்த மனுவில், இப்படி முறைகேடாக வாக்காளர்களை சந்தித்து சட்டத்தை ஏமாற்றி இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்று கூறினார்.