மல்லாக்காக சாய்ந்து.. கையை தூக்கி தலைக்கு ஸ்டாண்டு தந்து.. அதுவும் மோடி முன்னாடி.. அசால்ட் கெஜ்ரிவால்
டெல்லி: பிரதமர் மோடி வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும்போது, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த காரியம் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் பேசு பொருளாகிவிட்டது.. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.. ஒன்று, காங்கிரஸுக்கு மாற்றாக கட்சியாக ஆம் ஆத்மியை பலரும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
மற்றொன்று, பாஜகவுக்கு செக் வைக்கும் முயற்சியை பகிரங்கமாகவே கெஜ்ரிவால் கையில் எடுத்துவிட்டதுதான்.

காங்கிரஸ்
இத்தனை காலமும், பாஜகவுக்கு காங்கிரஸ்தான் மாற்றாக இருந்தது.. முதலில் டெல்லி, அடுத்து பஞ்சாப் என காங்கிரஸின் கோட்டைகளை தகர்த்துவிட்டு, ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது.. காங்கிரஸ் சார்பில் முதல்வர்கள் இருந்தாலும், காங்கிரஸுக்கு இணையாக ஆம் ஆத்மியும் 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது, 2 முதல்வர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்டாக உள்ளது..

கெஜ்ரிவால்
இன்னும் ஓபனாக சொல்லப்போனால், வரப்போகும் தேர்தலில் ஏதாவது ஒன்றில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால், காங்கிரஸை முந்திக் கொண்டு போய்விடும் வேகத்தில் உள்ளது. அநேகமாக, இமாச்சல பிரதேசம் அல்லது குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்று இப்போதே அரசியல் நிபுணர்கள் கணித்து சொல்லி வருகிறார்கள்.. அப்படி மட்டும் நடந்தால், இது காங்கிரசுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் சேர்த்து வைக்கப்படும் செக் என்று அடித்து சொல்கிறார்கள்..

வீழ்ச்சி
அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தை இழந்து, அரசியல் ஆட்டத்தில் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைதான், ஆம் ஆத்மி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வருகிறது... அதனால், இனி வரும் காலத்தில் பாஜகவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்..

அதிரடிகள்
காங்கிரஸை பொறுத்தவரை, பாஜகவை சமாளிக்கும் அளவுக்கு வீர்யம் போதவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஆம் ஆத்மியை வெல்லும் அளவுக்கு, அக்கட்சி தன்னை தயார்படுத்தி கொள்ளும் பரிதாப நிலையில்தான் உள்ளது என்பதை மறுக்க முடியாது. மற்றொரு பக்கம் பாஜகவை எடுத்து கொண்டால், காங்கிரஸைவிட, ஆம் ஆத்மியை சமாளிப்பதே இப்போது பெரும்பாடாகிவிட்டது.. கெஜ்ரிவாலின் அதிரடிகள், பதிலடிகள், ட்வீட்கள், காரசார பேட்டிகள் அனைத்தும், பாஜக மேலிடத்தை கதிகலங்க வைத்து வருகிறது.

துணிச்சல்
அவ்வளவு ஏன், பிரதமரின் வீடியோ கான்பரஸ் மீட்டிங்கில்கூட, அரவிந்த் கெஜ்ரிவாலின் துணிச்சலையும், அசால்ட் கெத்தையும் கண்கூடாக பார்க்க முடிந்தது.. தற்போது கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

கெஜ்ரிவால்
இதில், நம் முதல்வர் ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.. அப்போது, பிரதமர் மோடி சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும்போது, கையை மேலே தூக்குவதும், கையை தலைக்கு கொடுத்து ஸ்டேன்ட் கொடுக்குறதும், அப்படியே நாற்காலியில் மல்லாக்காக சாய்வதும், என வித்தியாசமான செய்கைகளை கெஜ்ரிவால் செய்தார்.

துரைமுருகன்
நம்ம துரைமுருகன் கேஷுவலாக சாய்ந்து உட்கார்ந்து அசால்ட் காட்டுவாரே, அதுபோலவே கெஜ்ரிவாலும் மேனரிசம் காட்டியிருந்தார். இது அத்தனையையும் பாஜக கவனித்துவிட்டு, வீடியோவாக வெளியிட்டுள்ளது.. ஒரு பிரதமர் பேசிக் கொண்டிருக்கும்போது, இப்படித்தான் மாநில முதல்வர் நடந்து கொள்வதா? என்று பாஜக தலைவர் ஷாஜாத் பூனவல்லா மற்றும் பாஜகவின் அமித் மாளவியா ஆகியோர் வீடியோவை ஷேர் செய்து கேள்வி எழுப்பி உள்ளனர்.. அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து அநாகரீகமான நடத்தையால் இழிவுபடுத்தி வருகிறார் என்றும் கமெண்ட்கள் எழுந்துள்ளன..
|
அசால்ட் மேனரிசம்
இப்படித்தான் கடந்த வருடம், இதேபோல தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஒரு வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங் நடந்தது.. பிரதமரும், முதல்வர்களும் பங்கேற்ற அந்த ஆலோசனை கூட்டத்தை டெல்லி அரசு ஒளிபரப்பு செய்துவிட்டது.. இந்த விஷயம் தெரிந்த பிரதமர் மோடி, "என்ன நடக்கிறது... இது நமது பழக்கத்திற்கும், நெறிமுறைகளுக்கு எதிரானது. இங்கு நடப்பதை யாரோ ஒரு முதல்வர் நேரடி ஒளிபரப்பு செய்கிறார். இது சரியான செயல்பாடு அல்ல" என்று கெஜ்ரிவாலை கண்டித்தார்..

மன்னிப்பு
உடனே கெஜ்ரிவாலும் தன்னுடைய செயலுக்கு ஓகே சார்.. இனிமேல் கவனமாக இருக்கிறோம்" என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.. வேற லெவலுக்கு போய்விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.. யார் கண்டது? 2024ம் ஆண்டு தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டாலும் போட்டியிடக்கூடும்.. பார்ப்போம்..!