தீவிரவாதத்தை ஆதரிக்காதீங்க.. யாசின் மாலிக்கிற்கு ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புக்கு இந்தியா சுளீர்
டெல்லி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு டெல்லி என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஒஐசி)இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் தீவிரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம் என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான யாசின் மாலிக் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டினார். 2019ல் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மே 19ல் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
‛யாசின் மாலிக் ஒரு ஹீரோ’... திரண்டு வந்த பாகிஸ்தான் தலைவர்கள்... இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு

பாகிஸ்தான் எதிர்ப்பு
இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், "பொதுவான குற்றச்சாட்டுகளின் கீழ் யாசின் மாலிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் காஷ்மீரி மக்களுக்கு எதிரான துன்புறுத்தலாகும். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களில் பாரபட்சமற்ற பொது வாக்கெடுப்பு மூலம் ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களின் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கட்டும்'' என தெரிவித்தது.

பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?
மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்திய ஜனநாயகம், அதன் நீதி அமைப்புக்கு இன்று கருப்பு நாள். யாசின் மாலிக்கை உடல்ரீதியாக இந்தியா சிறையில் அடைக்க முடியும். ஆனால் அவர் அடையாளப்படுத்தும் சுதந்திரத்தின் கருத்தை ஒருபோதும் சிறைப்படுத்த முடியாது. ஆயுள் தண்டனை "காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கு புதிய உத்வேகத்தை வழங்கும்'' என கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி," யாசின் மாலிக் ஒரு ஹீரோ. சிறை மற்றும் சித்திரவதையால் யாசின் மாலிக்கின் மனஉறுதியை உடைக்க முடியாது'' என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான், ‛‛காஷ்மீர் தலைவர் யாசின் மாலிக்கிற்கு எதிராக மோடி அரசின் தொடர்ச்சியான பாசிச தந்திரங்களை கண்டிக்கிறேன். போலியான குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும்''என்றார்.

ஒஐசி கண்டனம்
இதேபோல் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Organisation Of Islamic Cooperation அல்லது OIC) முக்கிய பிரிவான சுதந்திர மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விமர்சனம் செய்திருந்தது. மேலும் யாசின் மாலிக் தீவிரவாத செயலில் ஈடுபடவில்லை என்பது போலவும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த அமைப்பு இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்தியா எதிர்ப்பு
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛யாசின் மாலிக்கின் தீவிரவாத நடவடிக்கையை யாரும் நியாயப்படுத்த வேண்டாம். அவரது தீவிரவாத நடவடிக்கையை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மறைமுக ஆதரவா?
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. யாசின் மாலிக் விஷயத்தில் இந்த அமைப்பின் கருத்தானது தீவிரவாத செயல்களுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கும் வகையில் உள்ளது. தீவிரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த வேண்டாம்'' என காட்டமாக தெரிவித்துள்ளார்.