நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் நள்ளிரவிலும் விசாரணை- நாளை ஆஜராவாரா சோனியா காந்தி?
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் நேற்று நள்ளிரவிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து நாளை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்ற சோனியா காந்தி நாளை விசாரணைக்கு ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகளை சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றினர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய நிறுவனத்துக்கு கொடுத்த கடனுக்காக இந்த பங்கு பரிமாற்றம் நடந்தது. இதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்தது என்பது அமலாக்கப் பிரிவு வழக்கு.
விடாது துரத்தும் நேஷனல் ஹெரால்டு வழக்கு.. இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி

5 நாட்கள் விசாரணை
இவ்வழக்கில் கடந்த 5 நாட்களாக ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் நேற்று முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி. மதிய உணவு இடைவேளைக்கு அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து ராகுல் காந்தியிடம் விசாரணை நடந்தது.

விடிய விடிய விசாரணை
அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு 9 மணியளவில் அரைமணிநேரம் அவகாசம் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்டது. அப்போது இரவு உணவுக்காக வீட்டுக்குச் சென்ற ராகுல் காந்தி மீண்டும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு வந்தார். ராகுல் காந்தியிடம் அதிகாலை 12 மணியை தாண்டியும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 5 நாட்களாக மொத்தம் 60 மணி நேரத்துக்கும் மேலாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடந்தது.

காங். போராட்டம் சர்ச்சை
ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரும் கடந்த 5 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள் மறியல் போராட்டங்களை நடத்தினர். பின்னர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். டெல்லியில் நேற்றும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது காங். மகளிர் அணி நிர்வாகி டி சோசா போலீஸ் முகத்தில் எச்சில் துப்பியதும் சர்ச்சையானது.

நாளை சோனியா ஆஜராவாரா?
இந்நிலையில் இன்று ராகுல் காந்தி விசரணைக்கு அழைக்கப்படவில்லை. ராகுல் காந்தியிடம் இந்த வாரம் முழுவதும் இனி விசாரணை இருக்காது என்கின்றன அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள். அதேநேரத்தில் நாளை சோனியா காந்தி ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பால் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பின்னர் தற்போதுதான் வீடு திரும்பி இருக்கிறார் சோனியா காந்தி. இதனால் சோனியா காந்தி நாளை அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு ஆஜராவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.