என்ன பிளான்? இன்று திடீரென இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ்.. 2 நாள் டிரிப்.. பின்னணி
டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு வந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதன் முறையாக இந்தியா வரும் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இன்னும் நிற்கவில்லை.
நேற்றுதான் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்தி சென்று தாக்கும் திறன் படைத்த ஏவுகணை ஒன்றை ரஷ்யா சோதனை செய்தது. வரும் நாட்களில் உடன்படிக்கை ஏற்படாத பட்சத்தில் இந்த போர் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரக் கூடாது.. தடை விதித்த ரஷ்யா.. அதிரடி முடிவு

போர்
உக்ரைன் ரஷ்யா போரில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை மட்டுமே எடுத்துள்ளது. இதுவரை இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவாக இல்லை. அதே சமயம் ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 மிஸைல் சிஸ்டத்தின் உபகரணங்களை வாங்குவது, கூடுதல் கச்சா எண்ணெயையை தள்ளுபடிக்கு வாங்குவது என்று இந்தியா ரஷ்யாவிடம் நெருக்கம் காட்டி வருகிறது. இதை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் விரும்பவில்லை.

இங்கிலாந்து
ஆனால் அமெரிக்கா இந்தியாவிற்கு அறிவுரை வழங்கிய அளவிற்கு ஐரோப்பா நாடுகள் நேரடியாக இந்தியாவிற்கு எந்த விதமான அறிவுரையும் வழங்கவில்லை. இந்த நிலையில்தான் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகிறார். அவர் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசிக்க உள்ளார். ஆனால் இது தொடர்பாக இந்தியாவிற்கு அவர் எந்த விதமான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு
முதன் முறையாக இந்தியா வரும் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். ஒருங்கிணைந்த ராணுவ தளவாட உற்பத்தி குறித்து போரிஸ் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா - இங்கிலாந்து இணைந்து ராணுவ தளவாட உற்பத்தியை மேற்கொள்ளும். இந்தியா ரஷ்யா எப்படி இணைந்து பிரம்மோஸ் உருவாக்கி ஏற்றுமதி செய்கிறதோ அது போல. இதை பற்றி இன்று ஆலோசனை செய்யப்படும்.

என்ன பிளான்?
இன்று குஜராத்தில், அகமதாபாத்தில் பல்வேறு கூட்டங்களில் போரிஸ்ன் ஜான்சன் கலந்து கொள்கிறார். நாளை டெல்லியில் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தில் இந்தோ பசிபிக் அரசியல் குறித்தும், சீனாவின் தெற்காசிய ஆதிக்கம் குறித்தும் ஆலோசனை செய்யப்படும். அதேபோல் சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரம் குறித்தும் இரண்டு தலைவர்களும் ஆலோசனை செய்ய உள்ளனர்.