ஹிட்லர் கூட வேலை வாய்ப்பை கொடுத்தார்... மோடி என்ன செய்தார்? - அர்விந்த் கெஜ்ரிவால் கேள்வி
டெல்லி: ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் கூட தனது அடியாட்களுக்கு வேலை கொடுத்ததாக தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி உங்களுக்கு எதை கொடுத்தார்? எனக்கேள்வி எழுப்பி இருக்கிறார்.
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.
ஹாட்ரிக் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்... அரசு அதிகாரியை அரசியல்வாதியாக்கிய யோகங்கள்

பாஜகவிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணையுங்கள்
அப்போது பேசிய அவர், "ஜெர்மனியை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் கூட, தனது ஆட்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி உங்களுக்கு என்ன செய்தார்? உங்களுக்கு உதவி செய்ய இந்த கெஜ்ரிவால் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் கெஜ்ரிவால் மருந்துகளை தருவேன். மோடி தர மாட்டார். பாஜகவிலிருந்து விலகுங்கள். ஆம் ஆத்மியில் இணைந்திடுங்கள்.

நான் ஏன் வரி தள்ளுபடி செய்ய வேண்டும்?
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு மாநில அரசு வரித் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஏன் கேட்கிறீர்கள். உங்களுக்கு அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவ்வளவு அதிகமாக இருந்தால் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியிடம் பேசி யூடியூபில் அதை இலவசமாக பார்க்கும் வகையில் வெளியிட சொல்லுங்கள்.

படத்தை வைத்து மோடி அரசியல் ஆதாயம்
அப்படி செய்தால் அனைவராலும் ஒரே நாளில் இலவசமாக படம் பார்க்க முடியும். வரி விலக்கு செய்வதற்கு அவசியமே ஏற்பட்டு இருக்காது. 8 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இருந்தும்கூட அரசியல் ஆதாயத்துக்காக இந்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை கையில் எடுத்து இருக்கிறார்.

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக கண்டனம்
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அம்மாநில பாஜக தலைவர் அதேஷ் குப்தா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அர்விந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கள், காஷ்மீரி பண்டிட்டுகளின் வலியை அவர் உணராததை காட்டுகிறது.

பிரிவினைவாதிகளை ஆதரித்தவர் கெஜ்ரிவால்
காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பிரிவினைவாதிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தவர் அர்விந்த் கெஜ்ரிவால். அவரிடம் இருந்து காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கான பாராட்டுக்களை எதிர்பார்க்க முடியாது." என்றார்.