டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை நீடிப்பு.. ஐகோர்ட் உத்தரவிற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க, உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள உச்சநீதிமன்றம், ஐகோட்டின் தீர்ப்புக்கு உடனடியாக தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

Extension of the ban for 8 way road.. Supreme Court refuses to ban the high Court order

முன்னதாக சென்னையிலிருந்து சேலத்திற்கு மூன்று மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது. சேலம் நகரத்தையும், சென்னைக்கு அருகிலுள்ள படப்பையையும் இணைக்கும் விதத்தில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழிப்பாதை விரைவுச் சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.

இதனால் சென்னை - சேலம் இடையே 60 முதல் 70 கிமீ தூரம் பயணம் குறையும். மேலும் விரைவாகவும் வந்துவிடலாம் என்பதே மத்திய மற்றும் மாநில அரசுகள் கூறும் வாதம். இந்த பசுமைவழிச் சாலையில் 23 பெரிய பாலங்கள், 156 சிறிய பாலங்கள், 9 மேம்பாலங்கள், வாகனங்களுக்காக 22 கீழ்வழிப் பாதைகள், பாலங்களுடன் சேர்ந்த 2 கீழ்வழிப் பாதைகள், வனப்பகுதியில் 3 சுரங்கப் பாதைகள், 8 சுங்கச்சாவடிகள், பேருந்து மற்றும் லாரிகளுக்கான 10 நிறுத்தங்கள் ஆகியவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வர்த்தக நோக்கங்களுக்காகவே இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அரசுகள் விளக்கமளித்தன. ஆனால் அரசின் இத்திட்டத்தால் வெகுண்டெழுந்த சுமார் 6 மாவட்ட மக்கள், தொடர் போராட்டத்தில் குதித்தனர். ஏனெனில் இத்திட்டத்திற்காக விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் அழகான அடர்ந்த காடுகள் என பலவற்றையும் காவு வாங்க துடித்து நிற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது ஆத்திரப்படாமலா இருப்பார்கள் பாதிக்கப்படுபவர்கள்.

ஆனால் மக்கள் போராட்டங்களையும், உணர்வுகளையும் மதிக்காத அரசுகள் அடக்குமுறையை கையில் எடுத்தன. திட்டத்தை எதிர்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை, பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையிலடைத்து அச்சுறுத்தின. அத்துமீறி அதிகாரிகளால் நிலங்கள் அளக்கப்பட்டன.

இதனால் வாழ்வாதாரம், சொந்த வீடுகள் மற்றும் நிலங்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்து போராடினர் மக்கள். சொந்த ஊரிலேயே அகதிகளாகிவிட்டோமே என கண்ணீர் விட்டு கதறி கோயில்கள் முன்பு சிறப்பு பூஜைகளை செய்தனர். இந்நிலையில் தான் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் காங்கிரஸ் வழக்கறிஞர் சூரியப்பிரகாசம், வக்கீல் வி.பாலு, 5 மாவட்ட விவசாயிகள், தர்மபுரி எம்.பி அன்புமணி உள்ளிட்டோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தனர்.

இவ்வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் 8 வழிச்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் மற்றும் 6 மாவட்ட மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

தேர்தல் வந்ததால் இடையில் இவ்விகாரத்தை கையில் எடுக்காமல் மத்திய அரசு அமைதி காத்தது. தற்போது மோடி அமைச்சரவை பதவியேற்ற அடுத்த நாளே, இவ்விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான கோடைகால சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இவ்விகாரத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்குமே விளக்கம் அளிக்க கூறி, நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் மேல்முறையீடு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர் இவ்வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

English summary
Supreme Court has refused to ban the verdict of the Madras High Court against the ban on Chennai - salem 8 way road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X