100ஆவது நாளில் விவசாயிகள் போராட்டம்.. ஒரு அங்குலம்கூட நகர மாட்டோம்... அடுத்தகட்ட திட்டம் என்ன?
டெல்லி: விவசாயிகளின் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை ஒரு அங்குலம்கூட நகர மாட்டோம் என விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார்,
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் இன்று 100ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த நாளை கறுப்பு நாளாக அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
பொதுமக்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், மக்கள் தங்கள் அலுவலகங்களிலும் வீடுகளிலும் கறுப்புக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடங்கியது எப்படி
மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று விவசாய சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல் சில வாரங்கள் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாபில் ஆட்சியிலிருந்த அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு விவசாயிகள் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்தது. அதைத்தொடர்ந்து தலைநகர் டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் கடந்த நவம்பர் 27ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்று கூடாரங்கள், இன்று ஏசிக்கள்
தலைநகரில் கடந்த டிசம்பர் மாதம் விவசாயிகள் போராட்டம் தொடங்கியபோது, அங்கு கடும் குளிர் நிலவியது. மற்ற மாநிலங்களைவிட டெல்லியில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். இதனால் குளிரிலிருந்து தப்பிக்கவும் நீண்ட நாட்கள் போராட்டத்தைத் தொடரவும் வசதியாகக் கூடாரங்களை விவசாயிகள் எழுப்பினர். இன்னும் சில வாரங்களில் கோடைக் காலம் தொடங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடும் வெயிலிலிருந்த தப்பிக்கும் விதமாக தற்போது ஏசிக்களை விவசியகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

குடியரசு தின டிராக்டர் பேரணி குழப்பம்
விவசாய சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஜனவரி 26ஆம் தேதி தலைநகரில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். அப்போது மற்ற அமைப்பினரும் அதில் புகுந்து கொண்டதால் திடீர் குழப்பம் ஏற்பட்டது. சில விவசாயிகள் டெல்லி செங்கோட்டையில் விவசாயச் சங்கங்களுக்கு ஆதரவான கொடியையும் ஏற்றினர். இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். போலீசாரும் காயமடைந்தனர். இதன் காரணமாக பட்ஜெட் தினத்தன்று நடைபெறவிருந்த டிராக்டர் பேரணியை ரத்து செய்வதாக விவசாய அமைப்புகள் அறிவித்தன.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பிரபலங்கள்
விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் ரிஹன்னா விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி பதிவிட்டு, "நாம் ஏன் இது குறித்துப் பேசுவதில்லை" என ட்வீட் செய்தார். அதைத்தொடர்ந்து மியா கலிஃபா, கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம் இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை என்றும் இதில் வெளிநாட்டினர் கருத்துச் சொல்ல தேவையில்லை என்றும் இந்தியப் பிரபலங்கள் பதிலளித்தனர்.

கட்சிகளின் நிலைப்பாடு
பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளைத் தவிர முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன. விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப் மாநிலத்தில் ஷிரோமணி அகாலி தளமும், ஹரியானா மாநிலத்தில் இந்திய தேசிய லோக் தளமும் பாஜகவின் தேசிய முற்போக்கு கூட்டணியை விட்டு வெளியேறின. அதேபோல தேர்தல் முடிவுகளிலும் விவசாய போராட்டங்கள் எதிரொலித்தன. டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்தது.

ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்
விவசாயிகள் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இது குறித்து விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்" என்றார். மத்திய அரசுக்கும் விவசாயச் சங்கங்களுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் போராட்டம் தொடர்கிறது.