வேளாண் சட்டங்கள் மதநூல் அல்ல.. திருத்துங்கள் - ஃபரூக் அப்துல்லா
டெல்லி: வேளாண் சட்டங்களைத் திருத்தக்கூடாது என்பதற்கு அவை ஒன்றும் மதநூல்கள் அல்ல. விவசாயிகளுடன் பேசி மத்திய அரசு ஒரு தீர்வுக்கு வர வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சி வரிசையில் பாஜகவும் ஒருநாள் அமரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவைில் பேசிய ஃபரூக் அப்துல்லா,

ஏன் பேசக் கூடாது
''விவசாயிகள் பிரச்சனையில் நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், வேளாண் சட்டங்களைத் திருத்தம் செய்யக்கூடாது என்பதற்கு அவை ஒன்றும் மதம் சார்ந்த வேதநூல்களோ புனித நூல்களோ அல்ல. நாம்தான் வேளாண் சட்டங்களை இயற்றி இருக்கிறோம். விவசாயிகள் அதை ஏற்க மறுத்தால், நீங்கள் ஏன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது?

இது நம் தேசம்
நான் இரு கரம் கூப்பி உங்களிடம் வேண்டுகிறேன். விவசாயிகள் பிரச்சனையில் கௌரவம் பார்க்காதீர்கள். இது நம்முடைய தேசம். நாம் அனைவரும் இந்த தேசத்தைச் சார்ந்தவர்கள். இந்த தேசத்தை நாம் சார்ந்தவர்களாக இருந்தால், நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். விரைவில் தீர்வு கொண்டு வாருங்கள்.

திருக்குர் ஆன் எல்லோருக்குமானது
கடவுள் ராமர் நம் அனைவருக்கும் சொந்தமானவர். இதன் அடிப்படையில்தான் முஸ்லிம்களும் புனித திருக்குர் ஆன் நூலையும் பாவிக்கிறார்கள். திருக்குர் ஆன் நூல் எங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.. நம் அனைவருக்குமானது.

உங்களுக்கும் மதிப்பளிப்போம்
பாஜகவும் எதிர்க்கட்சி வரிசையில் ஒருநாள் அமரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் எங்களுக்கு மதிப்பளித்ததை விட அதிகமாக நாங்கள் உங்களுக்கு மதிப்பளிப்போம்" என்று ஃபரூக் அப்துல்லா பேசினார்.