என்னவாகும் காங்கிரஸ் எதிர்காலம்? தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது கரைந்துபோகுமா?
டெல்லி: அடுத்த மாதம் நடைபெறும் 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பதற்குப் பெரியளவில் எதுவும் இல்லை என்றாலும் கூட நிரூபிக்கப் பல விஷயங்கள் உள்ளன.
உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதில் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப். 10இல் தொடங்கி 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகளும் வரும் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
உபி தேர்தல்: களத்தில் மொத்தமாய் குதித்த காங்கிரஸ்.. சோனியா, மன்மோகன், ராகுல்,ப்ரியங்கா பிரச்சாரம்

5 மாநில தேர்தல்
இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பாஜக தான் ஆட்சியில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பாஜக முக்கிய போட்டியாளர் இல்லை என்பதால் 2017ஐ போலவே இதில் 4 மாநிலங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பாஜக களமிறங்குகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பாஜக களமிறங்குகிறது. இதற்குத் தேவையான பணிகளைப் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

காங்கிரசுக்கு முக்கியம்
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் கூட நிரூபிக்கப் பல விஷயங்கள் உள்ளன. காங்கிரஸ் அவ்வளவு தான், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தியோ அல்லது பாஜகவை வீழ்த்தும் வியூகமோ காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று பல்வேறு கட்சிகளும் விமர்சிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

விமர்சனம் ஏன்
ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை வீழ்த்த முடியவில்லை. கடந்த 2019 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக மோதிய 90%க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தான் வென்றிருந்தது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியது மாநிலக் கட்சிகள் தானே தவிரக் காங்கிரஸ் இல்லை. இதே நிலை தான் அடுத்து வந்த தேர்தல்களிலும் கூட எதிரொலித்தது. 2019இன் பிற்பகுதியில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி இருந்த ஹரியானாவில் வென்றது பாஜக. ஜார்கண்டில் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியால் தான் பாஜகவை வீழ்த்த முடிந்தது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அனுபவம் வாய்ந்த சரத்பவாரால் தான் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடிந்தது. உத்தவ் தாக்ரே என்ற வலுவான தலைமையில் ஆட்சி நடைபெறுவதால் தான், கூட்டணி ஆட்சி என்றாலும் எவ்வித சிக்கல் இல்லாமல் தொடர்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு இல்லையா எனக் கேட்கலாம். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு எப்படிக் கவிழ்ந்தது என்பது விடை அறிந்தவர்களுக்கு இதில் காங்கிரசின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

2020 ஏமாற்றமே
கடந்த 2020இல் அதேபோல டெல்லி மற்றும் பீகாரில் தேர்தல் நடைபெற்றது. ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்த டெல்லியில் அவர்களால் ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. பாஜகவின் மிகக் கடுமையாகப் பிரசாரத்திற்குப் பின்னரும் கூட ஆம் ஆத்மி தான் அவர்களை நிறுத்தியது. பீகாரில் ஆர்ஜேடி 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அவர்கள் கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரசால் 70இல் 19ஐ மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனால் அங்கு பாஜக கூட்டணி ஆட்சியே தொடரும் நிலை ஏற்பட்டது.

கெத்து காட்டிய தீதீ
கடந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநில தேர்தல்களிலும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டியாக இருந்த அசாம் மற்றும் புதுவையில் வென்றது பாஜக தான். மேற்கு வங்கத்தில் பாஜக வெல்ல எந்தளவு முயன்றது என்பது அனைவருக்கும் தெரியும். திரிணாமுல் கட்சியில் இருந்து பலரும் தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு சென்றனர். பிரதமர் மோடியே நேரடியாகச் சென்று பல முறை பிரசாரம் செய்தார். இருப்பினும், அதையெல்லாம் தாண்டி திரிணாமுல் கட்சியால் தான் பாஜக அலையைத் தடுத்து நிறுத்த முடிந்தது.

பிராந்திய கட்சிகள்
இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த 5 மாநில தேர்தல் வருகிறது. கடந்த கால தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை வீழ்த்த முடிவதில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக எதிர்க்கட்சி விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தான் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தைத் தாண்டி பிற மாநிலங்களில் தங்கள் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. கோவா தேர்தலிலும் அது தனித்துக் களமிறங்குகிறது. அதேபோல பஞ்சாபில் ஆம் ஆத்மியும் முக்கிய போட்டியாக உருவெடுத்துள்ளது. கடந்த 2017 சட்டசபைத் தேர்தல் 2019 லோக்சபா தேர்தலில் அங்கு ஆம் ஆத்மி கணிசமான வெற்றியைப் பதிவு செய்திருந்தது. தற்போது வெளியாகும் தேர்தல் முடிவுகளிலும் கூட ஆம் ஆத்மி வெல்லவே வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ்
இப்படி மாநிலக் கட்சிகள் தேசிய அளவில் தங்களை வளர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதால் தான் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதையும் விட இந்தத் தேர்தல் முக்கியமானதாக மாறியுள்ளது. இதில் உத்தரப் பிரதேசம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வலுவான ஒன்றாகவே உள்ளது. குறிப்பாகக் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும். உ.பி-இல் கூட பிரியங்கா காந்தி கடந்த 1.5 ஆண்டுகளாகவே கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பெண்களை முன்னிறுத்தி அவர் பிரசாரம் செய்து வரும் நிலையில், 20 இடங்களில் அங்கு அவர்கள் வென்றால் கூட அது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதொரு முடிவு தான்.

ஏன் முக்கியம்
2024 மக்களவை தேர்தலுக்குத் திட்டமிட்டுத் தான் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பிற மாநிலங்களில் தங்கள் தடத்தைப் பதிக்கத் தொடங்கியுள்ளன. அதேபோல காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்த முடியாது என்ற விமர்சனமும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதை மாற்றி தேசிய அளவில் தாங்கள் இன்னும் வலுவான கட்சி தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. எனவே, இந்த 5 மாநில தேர்தல் காங்கிரசுக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. அப்படி காங்கிரசால் இந்த 5 மாநில தேர்தல்களில் வெல்ல முடியவில்லை என்றால் 2024இல் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் காங்கிரஸ் இருக்குமா என்பது பெரும் சந்தேகமே!