குடியரசு தின விழாவுக்கு கம்பீரம்.. அணிவகுக்கக் காத்திருக்கும் ரபேல் போர் விமானம்!
டெல்லி : இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் புதுவரவாக ரபேல் போர் விமானங்களும் இடம்பெற உள்ளன.

இந்தியாவின் 70 வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26 அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக சிறப்பு விருந்தினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் குழுக்கள், வீரர்களின் எண்ணிக்கை ஆகியனவும் குறைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியில் புதிதாக வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் முதல் முறையாக இடம்பெற உள்ளன.
வழக்கமாக விமானப்படை சாகசத்தின் போது, வெல்டிகல் சார்லி முறையில் மிகக் குறைந்த உயரத்தில் போர் விமானங்கள் பறந்து, தலைகீழாக சுழலும் காட்சி இடம்பெறும். இந்த ஆண்டு இந்த சாகத்தை ரபேல் விமானம் மேற்கொள்ள உள்ளதாக விமானப்படை விங் கமாண்டர் இந்திராணி நந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையை சேர்ந்த 38 போர் விமானங்களும், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான 4 விமானங்களும் ஜனவரி 26 அன்று நடைபெற உள்ள வான் சாகச நிகழ்வில் பங்கேற்க உள்ளன.