வெறும் 7 மாதங்களில் 4 பாஜக முதல்வர்கள் ராஜினாமா.. ஜஸ்ட் மிஸ்ஸான யோகி.. பாஜக மாஸ்டர் பிளான் தான் என்ன
டெல்லி: அடுத்தாண்டு பாஜக ஆட்சியிலுள்ள பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாநில பாஜக முதல்வர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று குஜராத். இங்குக் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, இன்று திடீரென ராஜினாமா செய்தார்.
தமிழகத்தின் புதிய ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
ஆனால், முதல்வர் பதவியில் இருந்து விலகும் நபர் விஜய் ரூபானி இல்லை. கடந்த மார்ச் முதல் சில மாதங்களிலேயே இதுவரை மொத்தம் நான்கு முதல்வர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

உத்தரகண்ட்
இந்த ஆண்டு ராஜினாமா டிரெண்டை தொடங்கி வைத்தவர் என்றால் அது உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத். இவர் கடந்த 2017 முதலே உத்தரகண்ட் முதல்வராக இருந்து வந்தார். இருப்பினும், இவர் மீதான அதிருப்தி மக்களிடையே அதிகமாக இருந்ததால், இவர் உத்தரகண்ட் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் பல மாதங்களாகவே இருந்தது. இந்தச் சூழலில் தான் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத், பாஜக தலைமை உடனான சந்திப்பிற்கு பிறகு கடந்த மார்ச் 9ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

வெறும் 4 மாதம்
அதைத்தொடர்ந்து உத்தரகண்ட் முதல்வராக திரத் சிங் ராவத் நியமிக்கப்பட்டார். இருப்பினும், தொடக்கமே முதல் திரத் சிங் ராவத்தின் செயல்பாடுகள் மக்களை கவரும் வகையில் இல்லை. கொரோனா காலத்தில் கும்பமேளாவை நடத்தியது இவர் மீது தவறான ஒரு பிம்பத்தை உருவாக்கியது. அதேபோல கொரோனாவையும் இவர் கட்டுப்படுத்த தவறியதால், 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரகண்ட் ஆனது. இதனால் உடனடியாக டேமேஜ் கன்டிரோல் மோடுக்கு சென்ற பாஜக தலைமை, வெறும் நான்து மாதங்களிலேயே திரத் சிங் ராவத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது. இவ்வளவு குறைவான காலத்தில் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படுவோம் என அவர் கண்டிப்பாக நினைத்திருக்க மாட்டார். அவருக்கு அடுத்து புஷ்கர் சிங் தாமி உத்தரகண்ட்டின் 11வது முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

ஷாக் தொடுத்த கர்நாடகா
விஜய் ரூபானிக்கு முன்பு ராஜினாமா செய்த முக்கிய தலைவர் என்றால் அது கர்நாடக முதல்வராக இருந்த பிஎஸ் எடியூரப்பா. ஒரு காலத்தில் கர்நாடகா பாஜகவின் முகமாக திகழ்ந்த எடியூரப்பா கடந்த ஜூலை 26ஆம் தேதி ராஜினாா செய்தார். எடியூரப்பா காரணமாகவே லிங்காயத்து சமூகத்தினரின் ஆதரவு பாஜகவுக்குச் சிந்தாமல் சிதறாமல் கிடைத்தது. ஆனாலும், சட்டசபை தேர்தலுக்கு 2 ஆண்டுகள் இருப்பதால், மற்றொரு தலைவரை உருவாக்க வேண்டும் என விரும்பியதால் அவரை ராஜினாமா செய்யச் சொன்னது பாஜக தலைமை. நீண்ட இழுபறிக்குப் பின்னரே, அவர் ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த மறுநாளே கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை அறிவிக்கப்பட்டார்.

யோகி ஆதித்யநாத்
இதேபோல உத்தரப் பிரதேசத்திலும் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களும் யோகி ஆத்தியநாத் அரசு குறித்து மக்களிடையே இருக்கும் எண்ணம் குறித்து ரிப்போர்ட் அளித்தனர். இதையடுத்து தனது முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள யோகி ஆதித்யநாத் டெல்லியில் முகாமிட்டது எல்லாம் அனைவருக்கும் தெரியும். அதன் பின்னரே பிரதமர் மோடியின் தளபதியாகக் கருதப்படும் ஏகே சர்மாவும் உபி பாஜக துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

என்ன காரணம்
பாஜக வரிசையாகத் தனது முதல்வர்களை மாற்றி வருவது சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அடுத்தாண்டு மொத்தம் 7 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் நீங்கலாக மற்ற ஆறு மாநிலங்களிலும் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டே மக்கள் அதிருப்தி அதிகமாக உள்ள முதல்வர்களை பாஜக நீக்கி வருவதாகக் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஆனால், பாஜகவின் இந்தத் திட்டம் பயன் தருமா என்பதைக் காலம் தான் பதில் சொல்லும்.