2 வருடங்கள் கழித்து.. இந்தியா-வங்கதேசம் இடையே தொடங்கும் ரயில் சேவை! எத்தனை ரயில் தெரியுமா?
டெல்லி: இந்தியா-வங்கதேசம் இடையே மே 29ல் மீண்டும் பயணிகள் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக 2020ல் நிறுத்தப்பட்ட ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று வங்கதேசம். பாகிஸ்தான், இலங்கையை ஒப்பிடும்போது இந்தியா-வங்கதேசம் இடையே காலம் காலமாக நல்ல உறவு உள்ளது.
4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்
மேலும் இருநாடுகளும் நல்ல புரிதலுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய வங்கதேச பிரதமர் செய்க் ஹசீனாவும் இந்தியாவுடன் நல்லுறவை பேணி வருகிறார்.

ரயில் சேவை
இந்தியா-வங்கதேசம் இடையே தரைவழி பயணமாக ரயில்கள் இயங்கி வந்தன. மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு ரயில்கள் சென்று வந்தன. இதனால் ஏராளமான மக்கள் பயன்பெற்று வந்தனர். மேலும் இருநாடுகளையும் இணைக்கும் பாலமாக இந்த ரயில்கள் இருந்தன.

கொரோனாவால் நிறுத்தம்
இந்நிலையில் தான் 2020 துவக்கத்தில் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்தியா-வங்கதேசம் இடையே நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மே 29ல் மீண்டும் துவக்கம்
இந்நிலையில் இந்தியா-வங்கதேசம் இடையே மே 29ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு கிளம்பியுள்ளது. அதன்படி வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து டாக்கா-கொல்கத்தா இடையே இயங்கும் வகையில் மைத்ரீ எனும் எக்ஸ்பிரஸ் ரயில் அந்நாட்டு ரயில்வே சார்பிலும், கொல்கத்தா-குல்னா நகர் இடையே பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் நமது ரயில்வே சார்பிலும் இயங்க உள்ளது.

என்ஜேபி-டாக்கா மிதாலி எக்ஸ்பிரஸ்
மேலும் என்ஜேபி-டாக்கா மிதாலி எக்ஸ்பிரஸ் சேவைகள் ஜூன் 1ல் ரயில் பவனில் இருந்து இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் ரயில்வே அமைச்சர்கள் மூலம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய முழு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.