"ஷோலே" பட வில்லன் போல மத்திய அரசு கொள்ளையடிக்கிறது.. ஜிஎஸ்டி வரி ஏற்றத்தை விளாசிய ராகுல் காந்தி
டெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக ராகுல்காந்தி மீண்டும் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளார். இந்த முறை அவர் ‛Sholay' திரைப்படத்தில் கிராமங்களை கொள்ளையடிக்கும் கதாபாத்திரமான ‛கப்பர்சிங்' பெயரில் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக 2014ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. மத்தியில் பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்து 8 ஆண்டுகளை கடந்து விட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஆகியவற்றை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
ஹோட்டல்களுக்கு பறந்த உத்தரவு.. சர்வீஸ் சார்ஜுடன் ஜிஎஸ்டி?.. மத்திய அரசு அதிரடி.. பொதுமக்கள் வரவேற்பு

ஜிஎஸ்டி மீது விமர்சனம்
குறிப்பாக மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நடத்தியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இவர்கள் இன்று வரை அதில் இருந்து மீண்டு வரவில்லை. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகம் இல்லை என காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து வருகின்றன.

ராகுல்காந்தி ‛டுவிட்’
அந்த வகையில் இன்றும் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை விமர்சனம் செய்துள்ளார். அதில், ‛‛மருத்துவ காப்பீட்டுக்கு 18 சதவீதம், மருத்துவமனை அறைக்கு 5 சதவீதம், வைரத்துக்கு 1.5 சதவீதம் என ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதமர் யாரை பாதுகாக்கிறார் என்பதை வலியுடன் நினைவூட்டுகிறேன். இதுதான் கப்பர் சிங் வரி. ஒற்றை, குறைந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும்'' என கூறியுள்ளார்.

கப்பர் சிங் வரியா.. அப்படினா என்ன?
இந்த டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கப்பர் சிங் வரி என விமர்சனம் செய்துள்ளார். இதன்மூலம் ராகுல்காந்தி ‛Sholay' திரைப்படத்தில் கிராமங்களை கொள்ளையடிக்கும் கதாபாத்திரமான ‛கப்பர் சிங்' பெயரை குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஜிஎஸ்டி மூலம் கொள்ளையடிக்கப்படுவதாக அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். கப்பர் சிங் என்பவர் 1950 காலக்கட்டத்தில் இந்தியாவின் தெற்கு மத்திய பகுதியில்கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தின் அடிப்படையில் ‛sholay' எனும் திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் அதனை ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ராகுல்காந்தி கப்பர் சிங் வரி என விமர்சனம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை அவர் இப்படி விமர்சனம் செய்துள்ளார்.

சண்டிகரில் ஜிஎஸ்டி கூட்டம்
முன்னதாக கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47 வது கூட்டம் சண்டிகரில் 2 நாள் நடந்தது. இந்த கூட்டத்தில் எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேனா மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜிஎஸ்டி வரி 12ல் இருந்து 18 சதவீதமாக கூட்டப்பட்டுள்ளது. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் அடுத்த கூட்டம்
இருப்பினும் இந்த கூட்டத்தில் கேசினோ, குதிரைப்பந்தயம், லாட்டரி, ஆன்லைன் கேம்களுக்கு வரி விதிப்பு தொடர்பாக மடிவுகள் எடுக்கப்படவில்லை. அடுத்த கூட்டத்தில் இதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் தமிழ்நாட்டின் மதுரையில் நடைபெறும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.