40 ஆண்டுகால காங். ரகசியங்கள்...கூட்டணியில் கலகம் மூட்ட வருகிறது குலாம்நபி ஆசாத்தின் புதிய புத்தகம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் கடந்த 40 ஆண்டுகாலமாக நடந்த பல முக்கியமான திரைமறைவு நிகழ்வுகளை பகிரங்கப்படுத்தும் புத்தகத்தை வெளியிட அக்கட்சியின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் முடிவு செய்துள்ளார் என்பது டெல்லி அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
நேரு குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமான மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம்நபி ஆசாத். நேரு குடும்பத்தின் 3 தலைமுறை தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர். 4 பிரதமர்களுடன் இணைந்து பண்ணியாற்றியவர் குலாம்நபி ஆசாத்.
இரவு நேர டிரைவ்.. அதிவேகம்.. சென்னை பெருங்களத்தூர் அருகே கோர விபத்து.. 5 பொறியாளர்கள் பலி
காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் என்ற வகையில் பெரும்பாலான மாநில அரசியல் விவகாரங்களில் தலையிட்டவர். இப்படி மூத்த முதுபெரும் காங்கிரஸ் தலைவரான ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான குலாம்நபி ஆசாத்தின் அண்மைக்கால போக்குகள் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரை ஒதுங்க வைத்திருக்கிறது.

சோனியாவுக்கு எதிராக கலகம்
காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி தலைமைக்கு எதிராக 23 தலைவர்கள் கடிதம் அனுப்பி இருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த ஜி23 குழுவின் சூத்திரதாரியாக இருந்ததே குலாம்நபி ஆசாத் என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. பாஜகவுடனான திரை மறைவு உறவால்தான் காங்கிரஸுக்குள் கலகமூட்டுகிறார் குலாம்நபி ஆசாத் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

பாஜகவுடன் நெருக்கம்
இதனை உறுதி செய்யும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்களும் நிகழ்ந்தன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் மாத கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் குலாம்நபி ஆசாத் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் பாயாமல் இருந்தது.

அடுத்த துணை ஜனாதிபதி?
பின்னர் ராஜ்யசபா எம்.பி. பதவியில் இருந்து குலாம்நபி ஆசாத் ஓய்வு பெற்ற போது, பிரதமர் மோடிதான் மிக மிக உருக்கமாக குலாம்நபி ஆசாத்துக்கு புகழாரம் சூட்டினார். காங்கிரஸ் கட்சி கனத்த மவுனம் காத்தது. குலாம்நபி ஆசாத்தை மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக்கவும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் குலாம்நபி ஆசாத்தின் அத்தியாயம் முடிவுக்கு வந்ததாகவே கூறப்பட்டது. அத்துடன் அடுத்த துணை ஜனாதிபதியாக குலாம்நபி ஆசாத்தை அமர வைக்க பாஜக யோசிப்பதாகவும் கூட தகவல்கள் வெளியாகின.

குலாம்நபி புத்தகம்
இந்த நிலையில், தனது பொது வாழ்க்கையை பற்றி ஒரு புத்தகம் எழுதி வருகிறார் குலாம்நபி ஆசாத். அதனை விரைவில் வெளியிடவிருக்கிறாராம். அதில் தான் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், அரசியல் கட்சித் தலைவர்களுடனான அனுபவம், கட்சி தலைமையிடம் தனக்கேற்பட்ட முரண்பாடுகள், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராக தானிருந்த போது ஏற்பட்ட சோனியா-ராகுல் குடும்பத்தின் தலையீடுகள் என பலவற்றையும் அதில் குறிப்பிடுகிறாராம். மேலும், காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் செயல்பாடுகள், அந்த கட்சிகளின் உள் அரசியலையும் அந்த புத்தகத்தில் பதிவு செய்கிறாராம் குலாம்நபி ஆசாத். அந்த புத்தகம் வெளிவந்தால் காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல கூட்டணியிலேயே பூகம்பம் வெடிக்கலாம் என்கிற தகவல் தமிழக எம்.பி.க்களிடம் பரவி வருகிறது. இதற்கிடையே, குலாம் நபி எழுதும் புத்தகம் குறித்து சோனியாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளாராம் கட்சி அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபால்.