இலக்கை எட்டாத மத்திய அரசு! கோல்போஸ்டை நகர்த்துகிறது! இந்திய பொருளாதாரம் பற்றி சிதம்பரம் விளாசல்
டெல்லி: இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை 2026-27 ல் எட்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கூறியதை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருப்பவர் ஆனந்த நாகேஸ்வரன். தமிழகத்தை சேர்ந்தவர். இவர் மத்திய நிதியமைச்சகத்தின் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் ‛‛2026-27ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை தாண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது'' என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
மோடி ஆட்சியமைந்த பிறகு.. 8 வருடங்களில் இந்தியா வியத்தகு அளவில் வளர்ந்துவிட்டது- எல்.முருகன் பேட்டி

5 டிரில்லியன் பொருளாதாரம்
இந்த நிகழ்ச்சியில் ஆனந்த நாகேஸ்வரன் பேசுகையில், ‛‛சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் திவால் சட்டம் போன்ற பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் நன்மைகள் வழங்க உள்ளது. இதன்மூலம் இந்திய பொருளாதாரம் 2026-27ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

சிறந்த நிலையில் இந்தியா
மேலும் ஒவ்வொரு 7 ஆண்டுக்கும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாகும் பட்சத்தில் 2040ம் ஆண்டில் தனிநபர் வருமானம் 15 ஆயிரம் டாலர் அளவிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 டிரில்லியன் டாலராகவும் இருக்கும். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் பிற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது''என்றார்.

ப சிதம்பரம் விமர்சனம்
ஆனந்த் நாகேஸ்வரனின் இந்த பேச்சை முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டக்கூடிய காலம் அடிக்கடி மாற்றப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கோல்போஸ்ட்கள் மாற்றம்
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2026-27ல் 5 டிரில்லியன் டாலர் இலக்கை தொடும் என்பது கோல் போஸ்ட்களை மாற்றுவது போல் உள்ளது. இந்த இலக்கின் உண்மையான காலக்கட்டம் இதற்கு முன்பு 2023-2024 ஆக இருந்தது. நாம் இன்னும் அந்த இலக்கை எட்டவில்லை. இதனால் தற்போது 2027க்குள்' இலக்கை அடைவோம் என தலைமை பொருளாதார ஆலோசகர் கூறியுள்ளார். இதில் முக்கிய நபர்களான பிரதமர், நிதி அமைச்சர், நிதி செயலாளர், தலைமை பொருளாதார ஆலோசகர் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இலக்கு உள்ளதாக நினைக்கிறேன். இதன்மூலம் பொருளாதாரம் மைல்கல்லை எட்டும் போதெல்லாம், நாங்கள் உங்களிடம் ஏற்கனவே சொன்னோம் என கூற வாய்ப்பு கிடைக்கும்'' என சாடியுள்ளார்.