• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அரசியல் எதிரிகள் இல்லாத ஆளுமை.. ஜெயலலிதா, கருணாநிதியுடன் அடுத்தடுத்து கூட்டணி.. அவர்தான் வாஜ்பாய்!

Google Oneindia Tamil News

டெல்லி: "இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜபேயி, நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து பேருந்து சேவையை துவங்கி வைத்து பயணம் செய்தார்.." என்று ஆல் இந்தியா ரேடியோவில் 1999ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி செய்தியறிக்கை கேட்டிறாத 90ஸ் மற்றும் அதற்கு முன்பு பிறந்த கிட்ஸ் இருந்திருக்க முடியாது.

வட மாநிலங்களில் பல ஊடகங்களில் அவர் பெயர் இப்போதும் கூட அதுதான்.. ஆனால் நமக்கு ஏற்றபடி பெரும்பாலான, தமிழ் நாளிதழ்கள், எப்போதுமே "வாஜ்பாய்" என அவர் பெயரை பயன்படுத்தின. பெயரிலேயே பல உச்சரிப்புகளை கொண்ட வாஜ்பாய்க்கு, அவரது வாழ்க்கையும் பல முனை திறமையாளராகத்தான் வார்த்து எடுத்தது.

இங்கே, மறைந்த முதல்வர் கருணாநிதி எப்படியோ, அப்படி அங்கே வாஜ்பாய். பன்முக ஆளுமை ரத்தத்தில் ஊறியது.

எதிரிகளற்ற தலைவர்

எதிரிகளற்ற தலைவர்

கவிஞர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, டைமிங்கில் ரைமிங்காக பேசும் பேச்சாற்றல் என அவரிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடந்தன. அரசியலில் சொந்த சித்தாந்தச் சார்பு இருந்தபோதிலும், அவர் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களாலும் அன்போடு விரும்பப்பட்டார். வாஜ்பாயிடம் இருந்த ஒரு தனித்துவமான குணம் என்னவென்றால், அவர் தனது அரசியல் எதிரிகளை கூட போற்றினார். அரசியல் எதிரிகள் வாஜ்பாயை போற்றினர். காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜவகர்லால் நேரு எப்படி முதலாவது பிரதமராக வந்தாரோ அப்படித்தான் பாஜகவிலிருந்து முதல் முறையாக பிரதமரானவர் வாஜ்பாய்.

அன்றே கணித்த ஜவகர்லால் நேரு

அன்றே கணித்த ஜவகர்லால் நேரு

ஷியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய பாரதிய ஜன சங்கம் கட்சியிலிருந்து எம்.பி.யாகி நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்தது முதலே அனைத்து கட்சி தலைவர்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டார். அவரது ஹிந்தி புலமையில் ஜவகர்லால் நேருவே மெய் மறந்தார். 1957ம் ஆண்டு, வெளிநாட்டு பிரமுகர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தபோது, "இவர் ஒரு நாள் இந்திய நாட்டின் பிரதமர் பதவியில் வந்து அமர்வார் பாருங்கள்" என்று கூறியிருந்தார் நேரு. சுமார் 40 வருடங்களுக்கு பிறகு நேருவின் வார்த்தை பலித்தது. 1996ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தபோது முதல் முறையாக பிரதமராக அரியணை ஏறினார் வாஜ்பாய்.

13 நாட்கள் ஆட்சி

13 நாட்கள் ஆட்சி

கூட்டணி ஆட்சியின் கொந்தளிப்புகளால், பதவி இழப்பது மீண்டும் பிடிப்பது என அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்று முறை இந்தியப் பிரதமராக இருந்தார். 1996ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து வாஜ்பாயை பிரதமராக பதவியேற்க அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அழைத்தார். இதையடுத்து 10வது பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஆனால் வாஜ்பாயால் பெரும்பான்மைக்குத் தேவையான பலத்தை திரட்ட முடியவில்லை. இதனால் 13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது. "இந்தியாவின் முதல் இந்து தேசியவாத அரசாங்கம் 13 நாட்களுக்குப் பிறகு இன்று கவிழ்ந்தது, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது கட்சி தோல்வியடைவது உறுதி என்று பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கு பதிலாக ராஜினாமா செய்தார்." என்று அப்போது செய்தி வெளியிட்டிருந்தது அமெரிக்காவின் முன்னணி நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட்.

ஆட்சியை கலைத்த ஜெயலலிதா

ஆட்சியை கலைத்த ஜெயலலிதா

இதையடுத்து 1996 முதல் 1998ஆம் ஆண்டு இடையே இரு ஐக்கிய முன்னணி அரசுகள் அமைந்து அவையும் கவிழ்ந்தன. மக்களவைக்கு மீண்டும் தேர்தல் 1998ம் ஆண்டு நடைபெற்றது. பாஜக மீண்டும் தனிப் பெரும் கட்சியாக வந்தது. தமிழகத்தில் 18 இடங்களை அதிமுக கைப்பற்றிய நிலையில் பாஜக, ஜெயலலிதாவின் ஆதரவைக் கோரியது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் இழுத்தடித்த பின்னர்தான் ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்தார் ஜெயலலிதா. அத்தோடு முடியவில்லை துயரம். 14 மாதங்கள் நீடித்த பாஜக ஆட்சியில் அதிமுகவால் படாதபாடு பட்டார் வாஜ்பாய். பிறகு ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சி கவிழ காரணமாக மாறியது ஜெயலலிதாவின் அதிமுக.

கருணாநிதியுடன் நட்பு

கருணாநிதியுடன் நட்பு

விடா முயற்சியுடையவர் வாஜ்பாய். பிறகு திமுக ஆதரவோடு பிரதமரானார். யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு 29 கட்சிகளை கொண்ட கூட்டணி அரசை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை நிரூபித்தார். ஒரு பக்கம் அவர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவற்றின் விசுவாசமான தொண்டராக வாழ்வைத் தொடங்கி கடைசி மூச்சு வரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தாலும், அவர் ஒரு மிதவாத இந்துத்துவாவாதியாகத்தான் இருந்தார். பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய் கலந்து கொள்ளவில்லை. குஜராத்தில், 2002ம் ஆண்டு நடைபெற்ற மத வன்முறையைக் கண்டித்தார், எனவேதான் ஒரு தவறான கட்சியிலிருந்த சரியான மனிதர் என்று வாஜ்பாயை திமுக தலைவர்கள் குறிப்பிட்டார்கள். அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள கருணாநிதிக்கும் தயக்கம் இல்லால் போக அவரது துவேஷமில்லாத அரசியல்தான் காரணமாக இருந்தது என்பார்கள்.

விஸ்வரூபம் எடுத்த பாஜக

விஸ்வரூபம் எடுத்த பாஜக

வாஜ்பாய் பதவிக் காலம் 2004ல் முடிந்த நிலையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று மாபெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுத்து ஆட்சியை பிடிக்க பெரும் அடித்தளத்தை கட்டியெழுப்பியது வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வையும் திறமையும் என்று சொல்லலாம்.
இந்திய அரசியலையே மாற்றியமைத்த பல பெரிய முடிவுகளை அவர் எடுத்தார். இது இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியது. வாஜ்பாய் பிரதமர் பதவியை விட்டு இறங்கியபோது நாட்டின், ​​மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக இருந்தது, பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் நன்றாக இருந்தது. அடுத்த 10 ஆண்டு காலம் மன்மோகன் சிங் ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய இது அச்சாணியாக இருந்தது.

தங்க நாற்கர சாலை

தங்க நாற்கர சாலை

ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் இதயத் துடிப்பு அதன் தமனிகளாகச் செயல்படுவது தரமான சாலைகள். சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு பெருநகரங்களை இணைக்கும் தங்க நாற்கர திட்டம் வாஜ்பாயின் கனவு திட்டம். இப்போது நாம் பார்க்கும் இந்த அகலமான தேசிய நெடுஞ்சாலைகள் வாஜ்பாயின் கனவு விதைத்த விதைகள்தான். இந்த திட்டம், இந்தியா அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க உதவியது. கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக செயல்படும் என்று வாஜ்பாய் உறுதியாக நம்பினார். இன்னொரு பக்கம் நாட்டின் பாதுகாப்பில் அவர் சமரசம் செய்யவில்லை. கார்கில் போரில் வென்று மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்க வைத்தது, வாஜ்பாய் மற்றும் அப்துல் கலாம் கூட்டுமுயற்சியால் 1998ம் ஆண்டு மே 11ம் தேதி பொக்ரானில் ரகசியமாக அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது எல்லாம் தனி வரலாறு.

பிறவி கவிஞர்

பிறவி கவிஞர்

வாஜ்பாய் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் தந்தை கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் ஒரு ஆசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் இருந்தார். இதன் காரணமாகத்தானோ என்னவோ வாஜ்பாய் ரத்தத்தில் கூட கவிதை பெருக்கெடுத்து ஓடியது. வாஜ்பாயின் ஆரம்பக் கல்வி குவாலியரில் உள்ள விக்டோரியா (லக்ஷ்மிபாய்) கல்லூரியிலும், கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியிலும் நிறைவு பெற்றது. வாஜ்பாய் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவராகும். படிப்பு ஒரு பக்கம் என்றால் வாஜ்பாய் மாணவப் பருவத்திலிருந்தே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் தன்னார்வத் தொண்டரானார். இதுதான் அவர் அரசியல் பாதைக்கு அடித்தளம் அமைத்தது.

பாரத ரத்னா பெற்ற வாஜ்பாய்

பாரத ரத்னா பெற்ற வாஜ்பாய்

முறைப்படி சொல்ல வேண்டும் என்றால், அடல் பிஹாரி வாஜ்பாய் 1942ல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், அப்போது அவரது சகோதரர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று 23 நாட்கள் சிறைக்குச் சென்றார். சுதந்திரத்திற்கு பிறகு, பாரதிய ஜனசங்கக் கட்சி 1951ல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில், அடல் பிஹாரி வாஜ்பாய் கட்சி நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் நெருக்கமானார். 1968 முதல் 1973 வரை பாரதிய ஜனசங்கக் கட்சியின் தலைவராக வாஜ்பாய் பதவி வகிக்க இது ஒரு காரணமாக இருந்தது. வாஜ்பாய் 1955 ஆம் ஆண்டு முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் இந்தத் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. 1957ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோ, மதுரா மற்றும் பல்ராம்பூர் ஆகிய இடங்களில் இருந்து ஜனசங்கத்தால் அடல் பிஹாரி வாஜ்பாய் களமிறக்கப்பட்டார். அவர் லக்னோ மற்றும் மதுரா தொகுதிகளில் தோல்வியடைந்துார், ஆனால் பல்ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று லோக்சபாவில் முதல் முறையாக கால் பதித்தார். மூன்று முறை இந்தியப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், உடல் நலக்குறைவால் வீட்டிலிருந்தே நீண்ட காலம் சிகிச்சை பெற்ற நிலையில், 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருது வாஜ்பாய்க்கு 2015ல் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரும் மற்றும் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று விருதை வழங்கி கவுரவித்தனர்.

இன்று வாஜ்பாயின் 97வது பிறந்த நாள்.

English summary
Atal Bihari Vajpayee birth day anniversary: Poet, journalist, politician, he was endowed with a lot of talent as a rhetorician who speaks for rhyming in timing. Despite his own ideological leanings in politics, he was also fondly liked by people from other parties. One of the unique qualities of Vajpayee was that he even praised his political opponents. Atal Bihari Vajpayee is the first Prime Minister from the BJP, just as Jawaharlal Nehru became the first Prime Minister from the Congress party. Vajpayee later became the Prime Minister with the support of the DMK. He proved that a coalition government of 29 parties could be run successfully beyond anyone's imagination. On the one hand he was a loyal volunteer of the RSS and the BJP, though he remained steadfast in his policy from the beginning until his last breath, but he remained a moderate Hindutva. Vajpayee did not attend the demolition of the Babri Masjid. DMK leaders described Vajpayee as the right man in the wrong party. Karunanidhi's reluctance to ally with him was attributed to his politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X