டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'எனக்கு அப்பவும் சரி, இப்பவும் சரி இந்தி தெரியாது..' கார்த்தி சிதம்பரம் பன்ச், பாஜக எம்பிகள் கப்சிப்

Google Oneindia Tamil News

டெல்லி: செயற்கை கருத்தரிப்பு மசோதா குறித்தும் விவாதம் குறித்தும் கார்த்தி சிதம்பரம் மக்களவையில் பேசிக் கொண்டிருந்த போது சில பாஜக எம்பிகள் கூச்சலிட்டனர். அப்போது சட்டென அவர் எனக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி இந்தி தெரியாது எனத் தமிழில் கூற அதன் பின்னரே பாஜகவினர் அமைதியானார்கள்.

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவையில், செயற்கை முறை கருத்தரித்தல் தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 தாக்கல் செய்யப்பட்டது.

இச்சட்டம் கருவுறுதல் கிளினிக்குகள் மற்றும் முட்டை/விந்து வங்கிகளுக்குக் குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடத்தை விதிகளை அமைக்க வழிவகுக்கிறது.

 கோச்சிங் கிளாஸ் என்பது மிரட்டி பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிட்டது.. Byjusஐ சாடிய கார்த்தி சிதம்பரம் கோச்சிங் கிளாஸ் என்பது மிரட்டி பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிட்டது.. Byjusஐ சாடிய கார்த்தி சிதம்பரம்

 செயற்கை கருத்தரிப்பு மசோதா

செயற்கை கருத்தரிப்பு மசோதா

மேலும், செயற்கை கருத்தரிப்புக்கு வரும் தம்பதிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கருமுட்டை தானமாக வழங்குபவர்கள், அதைப் பெறுபவர்களும் மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். கருமுட்டை விற்பனையில் ஈடுபடுபவர்கள், முதல் தடவை தவறு செய்திருந்தால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் பிடிபட்டால், அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் மசோதா உள்ளது.

 கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

முன்னதாக இச்சட்டம் நிறைவேற்றப்படும் முன் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசுகையில், "நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு மசோதா குறித்து விவாதிக்கும் வாய்ப்பு இந்த அவைக்குக் கிடைத்துள்ளது. 100 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவை நாம் எப்போதும் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடாகவே நினைப்போம். ஆனால், இந்தியாவில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பலரும் கருத்தரிப்பு தொழில்நுட்பம் மூலம் குழந்தையைப் பெற்றுக்கொள்கின்றனர், எனவே, இந்த தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், முறைப்படுத்தியும் வைத்திருக்க வேண்டும்.

 புராண இதிகாசங்கள்

புராண இதிகாசங்கள்

நான் புராண இதிகாசங்களைப் படித்து வளர்ந்தவன். இந்த அரசு புராண இதிகாசங்களில் இருந்து பல ஐடியாக்களை பின்பற்றும் அரசு. நமது அமைச்சர்கள் கூட பறக்கும் புஷ்பக விமானம் என்று கூறியவர்கள். மருத்துவ மாநாட்டில் பேசிய நமது பிரதமரும் கூட யானையின் தலை மனித உடலில் பொருத்தப்பட்ட விநாயகர் குறித்துப் பேசினார். நான் விநாயகரைத் தினமும் வணக்கும் நபர். நமது புராண இதிகாசங்கள் பல வழக்கத்திற்கு மாறான பிறப்புகளின் (unconventional birth) கதைகளைக் கொண்டுள்ளன. மகாபாரதத்தில் கூட கௌரவர்கள் இப்படி தான் பிறந்தனர். இதை நாம் டேஸ்ட் டியூப் குழந்தைகளின் தொடக்கப் புள்ளியாகக் கருதலாம்.

 மத்திய அரசு

மத்திய அரசு

ஏனென்றால், இந்த அரசு நமது புராண இதிகாசங்களில் இருந்தே சிந்தனைகளை எடுக்கிறது. இப்படி மகாபாரதத்தில் பல கதைகள் உள்ளன. கேரளாவில் உள்ள உலக புகழ்பெற்ற ஐயப்பன் கூட சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு பிறந்தவராகவே கூறப்பட்டுள்ளது. அதேபோல சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து பிறந்தவர் தான் முருகன் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசு இந்து புராணங்களில் இருந்து ஐடியாக்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், இந்தச் சட்டம் எந்தவொரு இந்து புராணங்களையும் பின்பற்றி உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாகக் கடுமையான காலனித்துவ ஆதிக்க மனநிலை கொண்ட ஒருவரிடம் இருந்தே இச்சட்டம் வந்துள்ளதாகத் தெரிகிறது.

 உள்ளடக்கவில்லை

உள்ளடக்கவில்லை

இச்சட்டம் பலரை உள்ளடக்கவில்லை. மாறாகப் பலர் இச்சட்டத்தில் இருந்து புறந்தள்ளுகிறது. நமது இந்து மதத்திலேயே உள்ள வித்தியாசமான பிறப்புகள் குறித்து நான் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இச்சட்டம் திருமணமான தம்பதிக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை நாட அனுமதிக்கிறது. தன்பால் ஈர்பாளர்கள், தனியாக வசிக்கும் ஆண்கள் இந்த தொழில்நுட்பத்தை அணுக இச்சட்டம் அனுமதிப்பதில்லை. எனவே, இதைக் காலனித்துவ ஆதிக்க சட்டம் என்று தான் நாம் கூற வேண்டும். இதை இந்து சட்டம் எனக் கூற முடியாது. எனவே, இந்து மத கருத்துகளைப் பரப்பும் அரசு இது என இனியும் சொல்லிக் கொள்ளாதீர்கள். இந்து மதம் என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியது. மாறாக இது காலணி பிரபுத்துவத்தைப் பரப்பவே இச்சட்டம் முயல்கிறது" என்றார்.

 எனக்கு இந்தி தெரியாது

எனக்கு இந்தி தெரியாது

அப்போது மக்களவையில் எழுந்த சில பாஜக எம்பிகள் கார்த்தி சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிராக இந்தியில் பேசினர். உடனே சட்டென அவர், "இந்தி எனக்குத் தெரியாது. அன்றும் எனக்கு இந்தி தெரியாது, இன்றும் எனக்கு இந்தி தெரியாது" என்று நச்சென பதில் அளித்தார். இதன் பின்னரே பாஜக எம்பிகள் அமைதியாகினர். இதையடுத்து தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம், "இச்சட்டம் தற்போதுள்ள புதிய நிலைகளை கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. சொல்லப்போனால் இது புதிய நிலைகள் இல்லை. நான் முன்னரே குறிப்பிட்டது போலப் புராண இதிகாசங்களில் உள்ளக் கருத்துகள் தான். இவை தான் காலணி பிரபுத்துவ ஆட்சியில் ஒடுக்கப்பட்டன. அதைத்தான் அரசு இப்போதும் செய்கிறது. இந்தத் தொழில்நுடம் தன்பால் ஈர்பாளர்கள், லிவ் இன் உறவில் இருப்பவர்கள். தனியாக வசிக்கும் ஆண்கள் ஆகியோரும் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.

 அரசியலமைப்பு மீறுகிறது

அரசியலமைப்பு மீறுகிறது

இந்த ஒருதலைபட்சமான சட்டம் நமது அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 14ஐ மீறுகிறது. அதேபோல உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறுகிறது. குடும்ப வாழ்க்கை என்பது தனிமனித சுதந்திரம். பெற்றோராக இருக்க விரும்பும் அனைவரும் இந்த தொழில்நுட்பத்தை அணுகும் வகையில் இருக்க வேண்டும். இதில் யாரையும் நாம் புறந்தள்ளக் கூடாது. மேலும், இச்சட்டம் கருமுட்டை தானம் வழங்கும் பெண்கள் திருமணமாகி இருக்க வேண்டும். அவர்களுக்குக் குழந்தை பிறந்திருக்க வேண்டும். அக்குழந்தை 3 வயதைத் தாண்டி இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இச்சட்டத்தின்படி சிங்கிளாக இருக்கும் பெண்கள் கருமுட்டை தானம் அளிக்க முடியாது. அதாவது ஒரு பெண் திருமணமாகி தனது கடமைகள் எனக் கூறப்படுவதை முடிக்கும் வரை தானம் அளிக்க முடியாது என இச்சட்டம் கூறுகிறது. இதுவும் அவமானகரமான ஒன்று. தனிநபரின் உரிமையைப் பறிக்கும் வகையில் இச்சட்டம் உள்ளது. இது பற்றி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

 முக்கிய பிரச்சினை

முக்கிய பிரச்சினை

இச்சட்டத்தின் வேறு ஒரு முக்கிய பிரச்சினை உள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி, கருவில் எதாவது குறைபாடுகள் உள்ளனவா என்பதை முன் கூட்டியே சோதனை செய்யலாம் எனக் கூறுகிறது. இது மிக முக்கிய பிரச்சினை. ஏனென்றால் என்ன மாதிரியான பிரச்சினை என்பது குறித்து விளக்கவில்லை. வாடகைத்தாய் குறித்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இன்னும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதுவே இன்னும் சட்டமாகவில்லை. இந்த விஷயத்தில் எதற்கு தனித்தனியாக இரண்டு மசோதாக்கள். இந்த இரண்டிற்கும் இடையே கூட ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. இரண்டையும் இணைத்து ஒரு சட்டம் கொண்டு வரலாம்.

 ஐசிஎம்ஆர்

ஐசிஎம்ஆர்

பொதுவாக டோனர் மூலம் பிறக்கும் குழந்தை 18 வயதாகும் போது தனது உண்மையான தந்தையை அறிய விரும்பலாம். அதற்கான உரிமை இச்சட்டத்தில் வழங்கப்படவில்லை. டோனர் அளித்தவரின் தனியுரிமையும் இதில் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை, ஐசிஎம்ஆர் தானம் அளித்தவரின் குணங்கள் குறித்துக் கூறலாம் எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவை குறித்து இதில் எதுவும் தெளிவாகக் கூறவில்லை. இது தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பாக ஆணையம் மட்டுமே நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும். தனி நபர்களால் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது என்றும் இச்சட்டம் கூறுகிறது. இதுவும் மிக முக்கிய பிரச்சனை. நீதிக்காக நீதிமன்றம் செல்லும் ஒருவரது உரிமையை யாராலும் பறிக்க முடியாது.

 தானம் அளிப்பவர்

தானம் அளிப்பவர்

தானம் அளிப்பவரின் ஆதார் அட்டையை அடையாளமாக வழங்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், தானம் அளிப்பவர் குறித்த தகவல்கள் வெளியிடக் கூடாது என்றும் கூறுகிறீர்கள். தானம் லீக் ஆனால் என்ன பொறுப்பு? அது குறித்த விளக்கவில்லை. இது மிகவும் செலவாகும் ஒரு தொழில்நுட்பம். அப்படியிருக்கும்போது, அனைத்து மக்களும் இந்தத் தொழில்நுட்பத்தை அணுக என்ன மாதிரியான திட்டத்தை அரசு வைத்துள்ளது. இந்த அரசு இந்துக்களின் கருத்துகளைத் தூக்கி நிறுத்தும் அரசு எனக் கூறுகிறது. ஆனால், இந்த அரசு அப்படி நடந்துகொள்வதில்லை. இது காலணி ஆதிக்க மனநிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அனைவரையும் உள்ளடக்கும் சட்டங்களை இந்த அரசு கொண்டு வருவதில்லை. இந்தச் சட்டம் அதற்கான மற்றொரு உதாரணம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

English summary
Karti Chidambaram speech during Assisted Reproductive Technology Regulation Bill 2020. Karti chidambaram latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X