என்ன சொல்றீங்க! ஓமிக்ரானால் ஏற்படும் ஆன்டிபாடி.. டெல்டா உள்ளிட்ட பிற வகைகளை தடுக்குமாம்- புதிய ஆய்வு
டெல்லி: ஓமிக்ரான் நாடு முழுக்க பரவி வரும் நிலையில், இது குறித்து ஐசிஎம்ஆர் நடத்திய முக்கிய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஓமிக்ரான் பரவல் தான் இப்போது உலகெங்கும் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் என உலக நாடுகளில் தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஓமிக்ரான் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும் கூட, அதன் மின்னல் வேகத்தில் பரவும் தன்மையால் மோசமான ஆபத்து ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tamilnadu Lockdown: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்தா.. முக்கிய முடிவு எடுக்கும் அரசு?

கொரோனா
இந்தியாவில் கடந்த டிச. மாதம் முதலில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்தது. இதனால் இந்தியாவில் தினசரி கேஸ்கள் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. நமது நாட்டில் ஓமிக்ரான் சமூக பரவலாக மாறிவிட்டதாகவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கும் ஓமிக்ரான் ஏற்படுவதாக மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

புதிய ஆய்வு
ஓமிக்ரான் குறித்த ஆய்வுகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தியாவில் ஐசிஎம்ஆர் சார்பில் நடத்தப்படும் ஆய்வில் ஓமிக்ரான் நோயில் இருந்து குணமடையும் நோயாளிகளின் உடலில் குறிப்பிடத் தகுந்த அளவு நோயெதிர்ப்பு சக்தி உருவாவதைக் கண்டறிந்துள்ளனர். இந்த நோயெதிர்ப்பு சக்தி ஓமிக்ரான் மட்டுமின்றி இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா உள்ளிட்ட மற்ற கொரோனா வகைகளையும் அழிக்கும் திறன் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கியம்
அதாவது ஓமிக்ரான் காரணமாக உடலில் தோன்றும் இந்த நோயெதிர்ப்பு சக்தி டெல்டா கொரோனாவை சிறப்பாகத் தடுக்கிறது. இதனால் கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களை மீண்டும் டெல்டா கொரோனா தாக்கும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது. இது டெல்டா கொரோனாவின் பரவலைக் குறைக்கிறது. ஓமிக்ரான் பரவல் உலகெங்கும் மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், ஐசிஎம்ஆரின் இந்த ஆய்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

டெல்டாவை குறைக்கும்
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "ஓமிக்ரான் கொரோனா நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிடுகிறது. இதனால் தோன்றும் ஆன்டிபாடிகள் ஓமிக்ரான் மட்டுமின்றி டெல்டா உள்ளிட்ட அனைத்து வகையான கொரோனா வகைகளையும் தடுக்கிறது. அதேபோல வேக்சின் போட்டுக்கொள்ளாத நபர்களிடையே ஓமிக்காரன் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் சற்றே குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் நாட்டில் 2.86 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தினசரி பாசிட்டிவ் விகிதமும் 19.59%ஐ தொட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.