இன்னும் 10 நாட்கள் தான்.. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 8 லட்சத்தை எட்டும்.. ஐஐடி பேராசிரியர் பகீர்
டெல்லி: கடந்த சில மாதங்களாகவே உலகின் பல பகுதிகளிலும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தே வந்தது.
இருப்பினும், கடந்த நவ. மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றப்போட்டது. உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது.
இந்த வாரம் ஓடிடியை தெறிக்க விட போகும் 5 படங்கள்...டாப்பில் ரசிகர்கள் எதிர்பார்த்த படமும் இருக்கே
இந்தியாவிலும் கிட்டதட்ட அதேநிலை தான். ஓமிக்ரான் பரவல் ஏற்பட்ட பின்னர், பல மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு
கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் எங்கு 3ஆம் அலை ஏற்படுமோ என்ற அச்சம் இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மும்பை & டெல்லி
இந்நிலையில், 3ஆம் அலை எப்போது ஏற்படும், அது எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது குறித்த சில முக்கிய தகவல்களை ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனீந்திர அகர்வால் பகிர்ந்துகொண்டுள்ளார். டெல்லி மற்றும் மும்பையில் ஓமிக்ரான் கொரோனாவால் வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை இன்னும் 10 நாட்களில் உச்சமடையத் தொடங்கும் என்றும் அப்போது தினசரி பாதிப்பு இரு நகரங்களிலும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செல்லும் என மனீந்திர அகர்வால் தெரிவித்தார்.

8 லட்சம் கேஸ்கள்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஓமிகார்ன் கொரோனா இந்த மாத இறுதியில் இந்தியாவில் உச்சமடையும். ஓமிக்ரான் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்து 8 லட்சம் வரை செல்லும். கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் வைரசின் தீவிர தன்மையை தாமதப்படுத்தும். அதேநேரம் சுகாதாரத் துறைக்கு அழுத்தம் ஏற்படும் அளவுக்கு மோசமான நிலை ஏற்படாது.

மருத்துவ சிகிச்சை
3ஆம் அலை மார்ச் மாதத்திற்குள் குறையத் தொடங்கிவிடும். அதன் பிறகு இது தொடர வாய்ப்பில்லை. ஓமிக்ரான் கொரோனாவால் வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்தாலும் கூட மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். 3ஆம் அலை உச்சமடையும் போதும் நிலைமை இப்படியே தான் இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.

மார்ச் மாதம் குறையும்
முன்னதாக, ஹெல்த் மெட்ரிக்ஸ் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) இயக்குநர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரேவும் இதே கருத்தைத் தான் குறிப்பிட்டிருந்தார். அதாவது அவர் கூறுகையில் , "இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை ஜனவரி பிற்பகுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் உச்சத்தை எட்டக்கூடும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் இதைத் தாமதப்படுத்தலாம். மார்ச் இறுதியில் வைரஸ் பாதிப்பு மீண்டும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரமாகக் குறைந்துவிடும்" என்று அவர் குறிப்பிட்டார்.