“தலித்”ஆக பிறந்தவர்.. “சாதி” ஒடுக்குமுறைகளை சந்தித்தவர்- இளையராஜாவை வாழ்த்தி பாஜக கொடுத்த அறிமுகம்
டெல்லி: பிரபல இசையமைப்பாளார் இளையராஜா எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தலித்தாக பிறந்து சாதிய ஒடுக்குமுறைகளை சந்தித்தவர் என பாஜக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.
இந்தியாவின் மூத்த முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், இந்தி என ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் 7000 க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
இந்த நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
பாஜகவில் ஐக்கியமாகும் நியனம எம்.பி.க்கள்.. இளையராஜா என்ன முடிவு எடுப்பாரோ? விசிக ரவிக்குமார் எம்.பி.

பிரதமர் மோடி வாழ்த்து
அவருடன் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "சாதாரண பின்னணியில் இருந்து வந்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர் இளையராஜா. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக கொடுத்த அறிமுகம்
இந்த நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மோடி அரசாங்கம், பல்வேறு துறைகளில் தலைசிறந்த இந்தியர்களை தேர்வு செய்து நியமனம் உறுப்பினர்களாக அறிவித்துள்ளது." என்று பதிவிட்டு 4 பேர் குறித்த அறிமுகத்தையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், இசையமைப்பாளர் இளையராஜா, ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் பணியாற்றி 7000 க்கும் அதிகமான பாடல்களையும், 20000 இசை கச்சேரிகளையும் நடத்தியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

தலித்தாக பிறந்தவர்
மேலும், "மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் இளையராஜா. தனது பணியின்போது எண்ணிலங்காத தடைகளையும், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் சந்தித்தவர். அனைத்து கஷ்டங்களையும் கடந்து தலைசிறந்த இசையமைப்பாளராக திகழ்கிறார் இளையராஜா.

விருதுகளும் கவுரவமும்
கடந்த 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும், பத்ம பூஷன் விருதையும் வென்றார் இளைராஜா. தனது இசைப்பணிக்காக பல்வேறு கவுரவங்களை பெற்றிருக்கிறார் இளையராஜா. 5 முறை தேசிய விருதையும், சங்கீத நாடக அகாடமி விருதையும் இளையராஜா வென்றிருக்கிறார். தடைகளை கடந்து சாதிக்க வேண்டும் என்பதற்கு இளையராஜாவின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக உள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.