மோடிக்கு பாராட்டு.. ஜனாதிபதி வேட்பாளர் எனப்பேச்சு.. இன்று எம்.பி! இளையராஜாவின் அரசியல் பயணம்
டெல்லி: பிரபல இசையமைப்பாளார் இளையராஜா கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டிய நிலையில் அவர் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் மூத்த முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், இந்தி என ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வெளியிட்டது.
இந்த புத்தகத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக இசைஞானி இளையராஜா, பி.டி.உஷா நியமனம்- பிரதமர் மோடி வாழ்த்து!

மோடிக்கு பாராட்டு
அதில் அவர், "நதி நீர், பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை அண்ணல் அம்பேத்கர் வகுத்தார் என பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக ஒரு செய்தியை நான் படித்தேன். 2016 ஆம் ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் நதி நீர் மற்றும் பாசனம் குறித்த அமைப்புகள் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய பங்கேற்றவர் என்பேத்கர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

அம்பேத்கர் மோடி இடையிலான ஒற்றுமை
அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி. " என குறிப்பிட்டுள்ளார்.

கடும் விமர்சனம்
இளையராஜாவின் இந்த கருத்துக்கு அரசியல்வாதிகள், திரையுலகை சேர்ந்தவர்கள் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இளையராஜா குடியரசுத் தலைவர் பதவிக்காகவோ அல்லது எம்.பி பதவிக்காகவோ இந்த கருத்தை தெரிவிப்பதாக பலர் விமர்சித்தனர். அதே நேரம் இளைராஜாவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை பதிவிட்டனர். குறிப்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

எம்.பி. பதவி
இந்த நிலையில், மாநிலங்களவை நியமனம் உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "சாதாரண பின்னணியில் இருந்து வந்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர் இளையராஜா. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.