பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கேரளாவில் தொடங்கியது பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
டெல்லி: கேரளாவில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் மாநிலத்தில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை கொட்டித்தீர்க்கும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் மழையளவு பரவலாக குறைந்துள்ளது. பருவமழைகள் முறையாக பெய்யாத நிலையில் கோடை மழையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
1959ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் கோடைக்காலத்தில் நாடு முழுவதும் மழையளவு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

மக்கள் தவிப்பு
அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் வறண்டு போயுள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ஜூன் 1ல் தொடங்கும் மழை
கேரளாவிலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாகதான் மழை பெய்துள்ளது. இதனால் பருவமழை எப்போது தொடங்கும் என காத்திருந்தனர் மக்கள். கேரள மாநிலத்தில் வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும்.

இன்று தொடங்குகிறது பருவமழை
ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால் நிச்சயம் இன்று பருவமழை தொடங்கிவிடும் கூறப்பட்டது. அதைப்போலவே கேரள மாநிலத்தில் இன்று பருவமழை தொடங்கிவிட்டது.

மழைக்கு சாதகமான சூழல்
ஏற்கனவே 6ஆம் தேதி பருவமழை தொடங்கிவிடும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு சாதகமான சூழல் ஏற்படாததால் அதைவிடவும் 2 நாள் தாமதமாக இன்று பருவமழை தொடங்கியிருக்கிறது

ரெட் அலர்ட் - எச்சரிக்கை
இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய வானிலை மையம் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கு கன மற்றும் மிக கனமழைக்கான இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

20செமீ வரை கொட்டித்தீர்க்கும்
தெற்கு கேரள மாவட்டங்களான கொல்லம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை 20 சென்டி மீட்டர் மழை வழை கொட்டித் தீர்க்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெள்ளிக்கிழமை கோழிக்கோடில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட் - வானிலை மையம்
சனிக்கிழமை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.