10 ஆயிரத்தை தாண்டிய ஓமிக்ரான்... சற்றே குறைந்த கொரோனா.. மத்திய அரசு சொல்வது என்ன?
டெல்லி: இந்தியாவில் 3.33 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு 525 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஓமிக்ரான் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து 10,050 ஆக உள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட 29 மாநிலங்களில் பரவி உள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. தற்போது கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ள நிலையில் தற்போது பாதிப்பு மாறி மாறி உயர்ந்தும் குறைந்தும் வருகிறது
கோவா சட்டசபை தேர்தல்: பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா- துண்டு துண்டாக சிதறுகிறது?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு
ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை 0.56 சதவீதம் குறைந்துள்ளது. இதில் ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட 10,050 பேரும் அடங்குவர். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 525 இறப்புகள் பதிவாகியுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் இன்று 17.78 சதவீதமாக குறைந்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 16.87 சதவீதமாக உள்ள நிலையில், நாட்டில் 3,33 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,87,205 ஆக உள்ள நிலையில், இது பாதிப்பு எண்ணிக்கையில் 5.57 சதவீதமாகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,92,37,264 ஆக அதிகரித்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 4,89,409 ஆக உயர்ந்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நாட்டில் தற்போது குணமடைந்தோர் விகிதம் 93.18 சதவீதமாக குறைந்தும் உள்ளது. இந்தியாவில் இதுவரை தடுப்பூசி அளவுகள் 161 கோடியைத் தாண்டிவிட்ட நிலையில், இந்தியாவில் பெரியவர்களில் 94 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் எனவும், அதே நேரத்தில் 72 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் பாதிப்பு
நாட்டில் கொரோன பாதிப்பு சற்றே குறைந்து வந்தாலும் ஓமிக்ரான் பாதிப்பு சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. நாட்டில் தற்போது ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10050 ஆக அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதே நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகரித்து வந்தாலும், ஓமிக்ரான் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.