ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்! தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம்! ஆனால் அரசுக்கு நஷ்டம்.. எப்படி
டெல்லி: இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டம் அடையும் நிலையிலும், தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் சுமார் 3 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடையில் சில நாட்கள் போர் முடிவுக்கு வருவதைப் போலத் தோன்றினாலும், சில காலம் இடைவெளியில் சண்டை மீண்டும் தீவிரமடைந்தது.
உக்ரைன் போரில் பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்தன.
ரஷ்யா vs ஐரோப்பிய நாடுகள்.. இந்தியாவிற்கு அடிச்ச லக்.. சலுகை விலையில் கச்சா எண்ணை.. சூப்பர் சான்ஸ்

கச்சா எண்ணெய்
அதேநேரம் இந்த போரில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தது. ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிர்க்கும் தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்தது மட்டுமின்றி, தொடர்ந்து ரஷ்யா உடன் இணக்கமான உறவையே இந்தியா வைத்துக் கொண்டு வருகிறது. உக்ரைன் போர் காரணமாகப் பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்யத் தயக்கம் காட்டி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்க யாரும் இல்லாமல் கேட்பாரற்று கிடக்கிறது.

இந்திய நிறுவனங்கள்
இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரிலையன்ஸ் மற்றும் நயாரா போன்ற இந்தியத் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி குவிக்கிறது. ரிலையன்ஸ் மற்றும் நயாரா போன்ற தனியார் நிறுவனங்கள் உள்நாட்டில் விற்பனையைக் குறைத்துவிட்டு, அதிகளவில் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்து பெரும் லாபங்களை அறுவடை செய்து வருகின்றன. ரஷ்யாவிடம் இருந்து நேரடி எரிபொருள் வாங்கத் தயங்கும் ஐரோப்பிய நாடுகளும் இவர்களிடம் கொள்முதல் செய்வதால் லாபம் அதிகரிக்கிறது.

அரசு நிறுவனங்கள்
ஆனால், அனைத்து சுத்திகரிப்பு நிறுவனங்கள் லாபம் ஈட்டுகிறது எனச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த அளவே கச்சா எண்ணெய்யை வாங்குகிறார்கள். ஏனென்றால் சப்ளேவை உறுதி செய்ய அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் வருடாந்திர ஒப்பந்தங்கள் மூலமே கச்சா எண்ணெய்யை வாங்குகிறார்கள். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால், நாட்டின் சில்லறை வர்த்தகத்தில், கட்டுப்படுத்தப்பட்ட விலை மற்றும் கடந்த ஏப்ரல் முதல் விலையும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பதால் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஜூன் காலாண்டில் பெரும் நஷ்டமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதி அதிகரிப்பு
உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சுமார் 62.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை வாங்கியுள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 3 மடங்கு அதிகமாகும். இதில் சுமார் 50 சதவிகிதத்தைத் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி மட்டுமே வாங்கி உள்ளன. இதன் காரணமாகக் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் எரிபொருள் ஏற்றுமதியும் 15% அதிகரித்துள்ளது.

விற்பனை குறைவு
தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் உள்நாட்டு விற்பனையைக் குறைத்துள்ளன. கடந்த ஆண்டில் 10%ஆக இருந்த தனியார் நிறுவனங்களில் உள்நாட்டு விற்பனை 7% ஆகக் குறைந்துள்ளது. இதனால் அரசு சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டு விற்பனையை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட விலை காரணமாக டீசல் விற்பனையில் லிட்டருக்கு 20 ரூபாய்க்கும் அதிகமாகவும், பெட்ரோலில் லிட்டருக்கு 17 ரூபாய்க்கும் மேல் அரசு நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

கேஸ் சிலிண்டர்
இதனால் ICICI செக்யூரிட்டீஸ் நிறுவனம், நாட்டின் முன்னணி அரசு சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான IOC மீதான அதன் மதிப்பீட்டை 'Buy'இல் இருந்து என்பதிலிருந்து 'Hold' ஆகக் குறைத்துள்ளது. அதற்குப் பதிலாக ரிலையன்ஸை நிறுவனத்தை அவர்கள் முனஅவைத்துள்லனர். இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இது பொற்காலம் இருக்கும் போதிலும், அரசு சுத்திகரிப்பு நிறுவனங்களின் சில்லறை விற்பனை காரணமாகத் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டுகின்றன. அதேபோல கேஸ் சிலிண்டர்களை பொறுத்தவரை, ஒவ்வொரு சிலிண்டர் விற்பனையின்போதும், அரசு சுமார் 200 ரூபாய் நஷ்டத்தை எதிர்கொள்கிறது.

பராமரிப்பு
ஏற்றுமதியில் அதிக லாபத்தை ஈட்ட முடியும் காலம் இது என்பதால் ஜாம்நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகத்தின் பராமரிப்பு திட்டத்தைக் கூட ரிலையன்ஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்றுமதி மூலம் அதிக லாபம் கிடைப்பது என்பது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பெரும் பயனை அளிக்கிறது. அதேநேரம் சில்லறை விற்பனையில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சற்றே கூடுதல் விலைக்கே இவர்கள் பெட்ரோல், டீசலை விற்பனை செய்கிறார்கள். இது மட்டுமின்றி தங்கள் டீலர்களுக்கான விநியோகத்தையும் குறைத்துள்ளனர்.

நஷ்டம் தொடரும்
ரஷ்யா எண்ணெய்யைத் தள்ளுபடி விலையில் வாங்கி அதைச் சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதன் மூலம் ஒரு பீப்பாய்க்கு சுமார் $30 டாலர் லாபம் கிடைப்பதால், ஏற்றுமதி செய்யவே தனியார் நிறுவனங்கள் விரும்புகின்றன. அதேநேரம் அரசுக்குச் சொந்தமான எரிபொருள் நிறுவனங்களும் கூட பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டன நிறுவனங்களாகவே உள்ளன. இதனால் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, முதலீட்டாளர்களுக்கும் லாபத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இருப்பினும், உக்ரைன் போர் இப்போது முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. இதனால் சில காலத்திற்கு இதே நிலை தான் தொடரும் எனச் சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.