உ.பி-இல் மீண்டும் பாஜக ஆட்சிதான்.. கிட்ட வரும் அகிலேஷ் கட்சி.. காங். எங்கே? புதிய சர்வே முடிவுகள்
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில வாரங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இந்திய டிவி-இன் புதிய சர்வே தற்போது வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
இதில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப். 10இல் தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் மார்ச் 10இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

5 மாநில தேர்தல்
இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். இதற்காகத் தேர்தல் பணிகளை அக்கட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இதில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு பாஜக கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.

முக்கியம்
ஏனென்றால் பிரதமர் மோடி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாராணசி உத்தரப் பிரதேசத்தில் தான் உள்ளது. இதனால் இதை இமேஜ் விஷயமாகவும் பாஜக தலைமை கருதுகிறது. மேலும் மொத்தம் 80 எம்பிகளை மக்களவைக்கு அனுப்புவதால் 2024 தேர்தலுக்கும் சேர்த்தே திட்டம் போடுகிறது பாஜக. இதனால் கடந்த சில வாரங்களாகப் பிரதமர் மோடியே உத்தரப் பிரதேசத்தில் பல முக்கிய திட்டங்களை நேரடியாகத் தொடங்கி வைத்து வருகிறார்.

மீண்டும் பாஜக
இந்நிலையில், உத்தரப் பிரதேச தேர்தல் தொடர்பாக கிரவுண்ட் ஜீரோ ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பை இந்தியா டிவி வெளியிட்டுள்ளது. அதில் உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 230 முதல் 235 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2017 உபி தேர்தலில் பாஜக 312 இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமாஜ்வாதி
அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி இந்தத் தேர்தலில் 160 முதல் 165 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2017இல் வென்ற 47 இடங்களை விட அதிகம் என்றாலும் கூட, ஆட்சியை அமைக்க இது போதுமானதாக இல்லை. அதேபோல காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 2 முதல் 5 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 202 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வேட்பாளர்
அதேபோல சிறந்த முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் 38.42% மக்கள் ஆதரவுடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் 31.51% ஆதரவுடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளார். அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி 12.51% சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு வெறும் 8.30% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத்
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் இருந்து போட்டியிடுகிறார். அக்கட்சியின் கோட்டையாக இருந்து வெற்றி பெறுவார். கோரக்பூர் தொகுதி உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி நீண்ட காலமாகவே பாஜக கோட்டையாக இருந்து வருகிறது. 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு மட்டும் கோரக்பூரில் இருந்து யோகி ஆதித்யநாத் 5 முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடும் போட்டி
அதேநேரம் கடந்த சில மாதங்களாக வெளியிடப்பட்டு வரும் கருத்துக் கணிப்பில் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியின் செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. தற்போது சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாடி பக்கம் வந்துள்ளனர். இதுவும் அக்கட்சிக்குப் பலமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.