இந்தியா- பிரிட்டன் இடையே ஒரு பில்லியன் பவுண்ட் ஒப்பந்தம்... இன்று மோடியை சந்திக்கும் போரிஸ் ஜான்சன்
டெல்லி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று குஜராத் மாநில தொழிலதிபர்களுடன் கலந்துரையாடிய அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த 2 நாள் பயணத்தின்போது இந்தியா-பிரிட்டன் இடையே ஒரு பில்லியன் பவுண்ட் அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரிட்டன் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பிரிட்டன் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று அங்குள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று பார்வையிட்டார். மேலும் தொழில்அதிபர்களுடன் கலந்துரையாடினார். இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேச உள்ளார்.
ஓ இதான் கைத்தறியா? எனக்கு கிடைச்ச பாக்கியம் - காந்தி ஆசிரமத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
இந்த சந்திப்பின்போது இருநாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு பேச்சுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இருநாடுகளின் உறவுகள் குறித்தும், இந்தோ-பசிபிக் பிராந்தியங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாவ தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 பில்லியன் பவுண்ட்
இந்நிலையில் தான் இந்தியா சுற்றுப்பயணம் குறித்து பிரிட்டன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருநாடுகளுக்கும் இடையே 1 பில்லியன் பவுண்ட்டுக்கும் அதிகளவில் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளதாக பிரிட்டன் தரப்பில் கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்தியாவில் பிரிட்டன் வணிகத்துக்கான வர்த்தக தடைகளை குறைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது நோக்கமாக உள்ளது. இந்தியா-பிரிட்டன் இணைந்து 1 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான புதிய முதலீடுகள் மற்றும் சாப்ட்வேர் முதல் சுகாதாரத்துறை வரையிலான பல்வேறு ஏற்றுமதி ஒப்பந்தங்களை உறுதி செய்ய் உள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து முழுவதும் கிட்டத்தட்ட 11,000 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

சென்னையில் ஆசிய பசிபிக் தலைமையகம்
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எலக்ட்ரிக் பஸ் ஆர்டி மற்றும் சென்னையில் ஆசிய பசிபிக் தலைமையகம் திறக்கப்படும். இதன்மூலம் 1000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தியாவின் முன்னனி நிறுவனமான பாரத் போர்ஜ், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான தெவ்வா மோட்டார்ஸ் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் 500 புதிய வேலைகளை உருவாக்க உள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனமான மாஸ்டெக் அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்து முழுவதும் 79 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்வதால் சுமார் 1,600 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.

இரட்டிப்பாக்கும் முயற்சி
மேலும் இன்று டெல்லிக்கு செல்லும் போரிஸ் ஜான்சன்2030க்குள் இருநாட்டு வர்த்தகம், முதலீட்டை இரட்டிப்பாக முயற்சிப்பார். பிரிட்டன் -இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பிரதமரின் பேச்சுவார்த்தை குழுக்கள் அடுத்த வாரம் இந்தியாவில் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானியுடன் சந்திப்பு
முன்னதாக நேற்று அகமதாபாத் நகரின் புறநகரில் உள்ள சாந்திகிராமில் உள்ள அதானி குழுமத்தின் உலகளாவிய தலைமையகத்தில் கவுதம் அதானியை போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் புதுப்பிக்கத்தக்க ஆற்ற், காலநிலை, விண்வெளி, பாதுகாப்பு துறை சார்ந்த ஒத்துழைப்பு போன்ற துறைகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

அதானியுடன் சந்திப்பு ஏன்
இந்தியா தனது ஆயுதப் படைகளை நவீனமயமாக்க 2030 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. இந்நிலையில் தான் பாதுகாப்புத் துறை தொடர்பாக அதானி-போரிஸ் ஜான்சன் இடையேயான சந்திப்பு முக்கிய கவனம் பெற்றுள்ளது. அதாவது மத்திய அரசு உள்நாட்டு தொழில் உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கில் ‛ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தை முன்னெடுக்கிறது. இதன்மூலம் அதானி குழுமம் இந்திய ஒப்பந்தங்கள் பெறும் பட்சத்தில் பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை எவ்வாறு வடிவமைத்து மேம்படுத்தலாம் என்பது பற்றி இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.