போரை எதிர்கொள்ளத் தயார்.. சீன எல்லையில் ஹோவிட்சர் பீரங்கிகளை குவிக்கும் இந்தியா.. அடுத்து என்ன?
டெல்லி: அருணாச்சல பிரதேசம் எல்லையில், சீனா தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள இந்தியா தயாராகியுள்ளது. அதிநவீன பீரங்கிகளை இந்தியா எல்லையில் நிலை நிறுத்தியுள்ளது.
லடாக் எல்லையில், சீனா அத்துமீறி நுழைய முற்பட்டதிலிருந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வருடம் இந்திய-சீன வீரர்கள் மோதிக் கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதன்பிறகு, எல்லையில் பதற்றம் அதிகரித்தது. லடாக் மட்டுமில்லாமல், அருணாச்சல பிரதேசம் வரை இரு நாடுகள் இடையேயான பல்வேறு எல்லைப் பகுதிகளில் உரசல்கள் இருந்து கொண்டுள்ளன.
8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!
சீனா எல்லையில் தன்னுடைய படைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள்.

அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா. சமீபத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு அருணாச்சல பிரதேசம் சென்றபோது கூட, தங்கள் அனுமதியை கேட்காமல் எப்படி அவர் வரலாம் என்று வம்பு செய்தது சீனா.

விமான எதிர்ப்பு பீரங்கிகள்
இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் எல்லையிலுள்ள மலைகளில் அதிநவீன விமான எதிர்ப்பு பீரங்கிகளை இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது. ஏற்கனவே போபர்ஸ், மற்றும் எம்-777 ஹோவிட்சர் வகை பீரங்கிகளை 30 முதல் 35 கி.மீ தூர பகுதியில் இந்தியா நிலை நிறுத்திய நிலையில் தற்போது, எல்-70 ஏர் டிபன்ஸ் ஏவுகணைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எல்லையில் படைகளின் தயார் நிலை குறித்து ராணுவம் மற்றும் விமான படை தளபதிகள் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

தவாங் பகுதி
இந்தியாவும், சீனாவும் சுமார் 3488 கி.மீ தூர எல்லையை பகிர்ந்து வருகின்றன. இதில் தவாங் என்பதும் முக்கியமான ஒரு பகுதியாகும். இந்த பிராந்தியத்தை சீனா தெற்கு திபெத் என்று கூறிக் கொண்டு, தங்களுக்குத்தான் சொந்தம் என்று வம்பு செய்து வருகிறது. கிழக்கு லடாக்கை தொடர்ந்து சீனாவின் அடுத்த டார்கெட் தவாங் பகுதியாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது இந்தியா.

போபர்ஸ் பீரங்கிகள்
நமது ராணுவத்தால் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டு வரும், சக்தி வாய்ந்த, 105 எம்எம் ஃபீல்ட் கன் என்று அழைக்கப்படும் பீரங்கிகள் மற்றும் 155 மி.மி. போபர்ஸ் பீரங்கிகள் முதல், புதிய நவீன வகை எம்-777 லகு ரக ஹோவிட்சர் பீரங்கிகள் வரை பல ஆயுதங்களும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தவாங் பகுதியில், போர் விமானங்களின் நடமாட்டத்தை கண்டறியும் ரேடார்களும் பொருத்தப்பட்டுள்ளன. சீன போர் விமானங்கள், இந்த பகுதிக்குள் நுழைந்தால் சுட்டு வீழ்த்த இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதை இந்த ஏற்பாடுகள் உறுதி செய்வதாக உள்ளன.

போபர்ஸ் பீரங்கிகள்
எல்-70 வகை பீரங்கிகளின் ரேஞ்ச் தூரம் 3.5 கி.மீதான். இருப்பினும், ட்ரோன் போன்றவற்றை சுட்டு வீழ்த்துவதில் இவை சிறப்பானவை. போர்பர்ஸ் பீரங்கிகள் 24 முதல் 30 கி.மீ தூரம் வரை குண்டு வீசக் கூடியவை. எம்-777 வகை பீரங்கிகள் 30-35 கி.மீ தூரம் வரை குண்டு வீசக் கூடியவையாகும்.

கார்கில் போர் நாயகன்
1999ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் யுத்தத்தில், போபர்ஸ் பீரங்கிகளின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. குளிர் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் அனைத்து வகை பீரங்கிகளும் சிறப்பாக செயல்படும் என்று கூறிவிட முடியாது. ஆனால் போபர்ஸ் அப்படி செயல்படக் கூடிய பீரங்கியாகும்.

ஹெலிகாப்டர்களில் கொண்டு செல்ல வசதி
எம்-777 வகை பீரங்கிகளை, சினூக் ஹெலிகாப்டர்களில் கொண்டு செல்ல முடியும். அருணாச்சல பிரதேசத்தில் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து இன்னொரு பள்ளத்தாக்கிற்கு பீரங்கிகளை நகர்த்துவதில் உள்ள சிரமங்களை இந்த வகை பீரங்கிகள் போக்கும் என்று வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. தவாங் பிராந்தியம், கடல் மட்டத்திலிருந்து 13,500 அடி உயரத்தில் உள்ளது. அங்கு ஏற்கனவே, மைனஸ் என்ற அளவில் குளிர் நிலவுகிறது. எனவே, அதற்கேற்ற ஆயுதங்களை பார்த்து பார்த்து திட்டமிட்டு களமிறக்கியுள்ளது இந்திய ராணுவம்.

வம்பு சண்டைக்கு போவதில்லை, வந்த சண்டையை விடுவதில்லை
இதுகுறித்து, கிழக்கு பிராந்திய ராணுவ கமாண்ட் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே கூறுகையில், பதற்றத்தை ஏற்படுத்துவது நமது நோக்கம் கிடையாது. பக்குவப்பட்ட வகையில், நிலைமையை சமாளிக்கவே விரும்புகிறோம். அமைதியே எங்கள் இலக்கு. அதேநேரம், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை நம்மிடம் உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளைத்தான் செய்துள்ளோம், என்று தெரிவித்தார்.