மோடிக்கு பிடிச்ச ”பால் மித்தாய்”..ஓபனாக வாங்கிக்கேட்ட பிரதமர்! மறக்காமல் கொடுத்த பேட்மிட்டன் வீரர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அல்மோராவின் பால் மித்தாய் இனிப்பு வகையை தாமஸ் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய பேட்மிட்டன் வீரர் லக்ஷ்யா சென் வழங்கினார்.
தாமஸ் கோப்பை பேட்மிட்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்றன. இதில் ஆண்களுக்கான கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
இதன் மூலம் இந்தியா 43 ஆண்டுகளுக்கு பின்னர் தாமஸ் கோப்பையில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு... பிரதமர் மோடி நாளை ஜப்பான் பயணம்

சரித்திரம் படைத்த இந்தியா
அரை இறுதிப் போட்டியில் டென்மார்க் அணியை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது. இறுதிப் போடியில் இந்திய பேட்மிட்டன் அணி 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியா அணியை வீழ்த்தி சரித்திரம் படைத்தது. இதில் கிடம்பி ஸ்ரீகாந்த், ஜானதன் கிரிஸ்டியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதேபோல் இந்திய ஆடவர் இரட்டையர் பிரிவில் ரெட்டி - சிராக் இணை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றனர்.

லக்ஷ்யா சென்
மற்றொரு வீரரான லக்ஷ்யா சென், இறுதிப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அந்தோணி கிண்டிங்கை 8-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற உதவினார். இந்த நிலையில் இந்தியாவுக்கு தாமஸ் கோப்பையை வென்றுகொடுத்த பேட்மிட்டன் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது இந்திய வீரர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்த மோடி, நம்மால் முடியும் என்ற மனப்பக்குவம் இந்தியாவுக்கு புதிய பலமாக அமைந்துள்ளது என்றார். வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என அவர் தெரிவித்தார்.

பால் மித்தாய் பரிசு
இந்த சந்திப்பின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பேட்மிட்டன் வீரர் லக்ஷ்யா சென், தனது சொந்த ஊரான உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவின் புகழ்பெற்ற இனிப்பு வகையான பால் மிட்டாயை வழங்கினார். இதனை தனது உரையின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, "முதலில் நான் லக்ஷ்யா சென்னுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்காக அல்மோராவிலிருந்து பால் மித்தாய் வாங்கி வந்திருக்கிறார். எனது சிறிய வேண்டுகோளை நினைவில் வைத்து இதை வாங்கி வந்ததை நினைத்து மகிழ்கிறேன்." என்றார்.

சின்ன சின்ன விசயங்களை கவனிக்கும் மோடி
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லக்ஷ்யா சென், "பிரதமர் மோடி சிறிய சிறிய விசயங்களில் கூட கவனம் செலுத்துகிறார். அவருக்கு அல்மோராவின் பால் மித்தாய் புகழ்பெற்றது என தெரிந்திருக்கிறது. என்னிடம் அதை வாங்கி வர சொன்னார். எனவே நான் அவருக்காக அதை வாங்கி வந்திருக்கிறேன். இதுபோன்ற சிறிய விசயங்களை பிரதமரை போன்ற பெரிய மனிதர் நம்மிடம் பேசுவது நன்றாக இருக்கிறது." என்றார்.