தாய்லாந்தில் சிக்கிய 100+ இந்தியர்கள்.. தொழில்நுட்ப கோளாறால் புறப்படாத விமானம்.. இப்படி கூட நடக்குமா
டெல்லி: தாய்லாந்து நாட்டிற்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்ற இந்தியப் பயணிகள் இப்போது நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட பயணிகள் சுமார் 80 மணி நேரம் தவித்து வருகிறார்கள்.
இந்தியர்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகத் தாய்லாந்து இருக்கிறது. தினசரி பல நூறு இந்தியர்கள் தாய்லாந்து நாட்டிற்குச் சுற்றுலா செல்கிறார்கள். அப்படி சமீபத்தில் தாய்லாந்து சென்ற 100க்கும் மேற்பட்டோர் இப்போது இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

விமான கோளாறு: டெல்லி வரவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், சுமார் 80 மணி நேரத்திற்கும் மேலாகப் பயணிகள் தவித்து வருகிறார்கள். மூன்று நாள் ஆகிவிட்ட நிலையில், விமான பயணிகள் ஏர்போர்ட்டில் தவித்து வருகிறார்கள். இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஃபூகெட்டில் சிக்கித் தவிக்கும் பயணிகள் இணையத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் சிரமம் குறித்துப் பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பாகப் பயணிகள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த விமானம் நவம்பர் 16ஆம் தேதி இரவு டெல்லிக்குக் கிளம்பத் தயாராக இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் காரணமாக விமானம் ஆறு மணி நேரம் தாமதமாகக் கிளம்பும் என்றார்கள்.
புலம்பல்: அப்போதும் நாங்கள் தங்க விமான நிறுவனம் எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. விமான நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருந்தோம். பிறகு விமானத்தில் ஏற அனுமதித்தனர். இருப்பினும், ஒரு மணி நேரத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு என்று இறங்கச் சொன்னார்கள். பின்னர் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகச் சொன்னார்கள்.
சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தில் இருந்து இருப்போர். அதில் பல முதியவர்களும் குழந்தைகளும் கூட இருந்தனர். அவர்களுக்குக் கூட விமான நிறுவனம் எதையும் செய்யவில்லை. சில மணி நேரம் கழித்து விமானம் புறப்படத் தயார் என்றார்கள். முன்பு ரத்து செய்யப்பட்ட அதே விமானம் தான்.. ஆனால், பிரச்சினை சரி செய்யப்பட்டதாகச் சொன்னார்கள். நாங்களும் விமானத்தில் ஏறினோம்.
சிக்கித் தவிக்கும் பயணிகள்: விமானம் புறப்பட்டது.. ஒரு வழியாகப் பிரச்சினை ஓய்ந்தது என நினைத்தோம். ஆனால், விமானம் புறப்பட்டுக் கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் மேலும் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகச் சொல்லி ஃபூகெட்டில் தரையிறக்கினர்" என்கிறார்கள். அப்போது முதல் பணிகள் அங்கேயே ஏர்போர்ட்டில் சிக்கியுள்ளனர்.
ஃப்ளைட் ரேடார் என்ற இணையதளத்தில் நாம் செக் செய்த போது, பயணிகள் சொல்வது உண்மை என்றே தெரிய வருகிறது. நவ.16ம் தேதி தாமதத்திற்குப் பின் புறப்பட்ட விமானம் சுமார் 2 மணி நேரம் அங்கேயே சுற்றி இருக்கிறது. அதன் பின்னர் அது அங்கேயே தரையிறங்கிவிட்டதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குச் சிக்கியுள்ள பயணிகள் தங்களுக்கு நேர்ந்துள்ள மோசமான அனுபவம் குறித்து இணையத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றே நெட்டிசன்களும் கூறுகிறார்கள்.
ஏர் இந்தியா விளக்கம்: இது தொடர்பாக ஏர் இந்தியா வட்டாரம் கூறுகையில், "விமானி அதிகபட்சம் குறிப்பிட்ட நேரம் தான் தொடர்ந்து விமானத்தை இயக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதன் காரணமாகவே நவ.16ம் தேதி திட்டமிட்டபடி விமானத்தை இயக்க முடியவில்லை. நவ. 17ம் தேதி விமானத்தை இயக்கிய போது அதில் தொழில்நுட்ப சிக்கல் கண்டறியப்பட்டதால் விமானத்தைத் தரையிறக்கினோம்.
பயணிகளுக்குத் தங்குமிட வசதி செய்து கொடுத்துள்ளோம். அனைத்து பயணிகளுக்கும் விமான டிக்கெட்டை நிச்சயம் திரும்பத் தந்துவிடுவோம். மேலும், ஏற்கனவே மற்ற விமானங்கள் மூலம் நாங்கள் பல பயணிகளைத் திருப்பி அனுப்பிவிட்டோம். இன்னும் சுமார் 40 பேர் மட்டுமே ஃபூகெட்டில் உள்ளனர். அவர்களும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications